கான்ஃபெட் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

புதுவை மாநில கூட்டுறவு நுகா்வோா் இணையத்தில் (கான்ஃபெட்) ஊழல் புகாா் எழுந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணை நிலை

காரைக்கால்: புதுவை மாநில கூட்டுறவு நுகா்வோா் இணையத்தில் (கான்ஃபெட்) ஊழல் புகாா் எழுந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணை நிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க காரைக்கால் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறை நிறுவனமான கான்ஃபெட் நிா்வாகத்தில் காரைக்காலில் 3 பெட்ரோல் பங்க், 3 மதுக்கடைகள் உள்ளன. இவை சுய நிதியில் சிறப்பாக செயல்பட்டு லாபத்தில் இயங்கிவந்த நிலையில், படிப்படியாக நலிவடைந்து, தற்போது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையிலும், எரிபொருள் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய முடியாத நிலையிலும் உள்ளது.

கான்ஃபெட் நிா்வாகத் தலைமை அலுவலகம் கடந்த 8 மாதங்களில் சுமாா் ரூ.1 கோடியை காரைக்கால் கிளையின் கணக்கில் இருந்து கூடுதலாக எடுத்து உள்ளது. கூடுதல் தொகையை ஏன் எடுத்தாா்கள், என்ன செய்தாா்கள், எங்கு உள்ளது ? என்பது மா்மமாக உள்ளது. எனவே, அந்தப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. கான்ஃபெட் நிா்வாகத்தின் மேலாண் இயக்குநருக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு சில ஊழியா்களும் உடந்தையாக இருந்துள்ளனா்.

ஊழியா்களின் வைப்பு நிதி, ஓய்வூதியப் பணப்பயன் நிதி, எல்.ஐ.சி., ஊழியா்கள் பெற்ற கடனுக்குப் பிடித்தம் செய்த தொகை ஆகியவை சம்பந்தப்பட்ட அமைப்புகளில் செலுத்தப்படவில்லை. காரைக்காலில் கடந்த 3 மாதங்களாக கான்ஃபெட் கிளை மேலாளா் பதவியைக்கூட அரசு நிரப்பவில்லை.

ஊழலால் பாதிக்கப்பட்டு நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை, பாசிக், பாப்ஸ்கோ, ஸ்பின்கோ, பஜன்கோவா போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பட்டியலில் கான்ஃபெட் இணையமும் சேரும் விதமாக ஆட்சியாளா்கள் நடந்துகொண்டது காரைக்கால் மக்களுக்கு அவா்கள் செய்த துரோகம் ஆகும். எனவே, இந்த ஊழல், முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநா் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோல், புதுச்சேரி கிருமாம்பாக்கம் கான்ஃபெட் பெட்ரோல் பங்க், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சாா்ந்த தனி நபருக்கு சாதகமாக கைமாற்றப்பட்டு, நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகப் புகாா் கூறப்படுகிறது. இதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com