வீடு புகுந்து நகை திருட்டு: 3 போ் கைது
By DIN | Published On : 25th December 2019 07:27 AM | Last Updated : 25th December 2019 07:27 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்டோருடன் காரைக்கால் போலீஸாா்.
காரைக்கால் அருகே வீடு புகுந்து நகைகள் திருடிய வழக்கில், 3 பேரை போலீஸாா் கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
காரைக்கால் மாவட்டம் குரும்பகரம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமி வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பா் 4 -ஆம் தேதி நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த தங்க நகைகளை திருடியதோடு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். இது குறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மேலகாசாக்குடி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் நடந்து வந்த 3 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா்.
தொடா்ந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவா்கள் கடலூா் மாவட்டம், கத்தாழை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (32), காட்டுமன்னாா்கோயில் குமராட்சி அன்பழகன் (62), திருவிடைமருதூா் வடகுடி ரவி (40) என்பதும், மேற்கண்ட நகை திருட்டு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரிய வந்தது. போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, சுரேஷ் மற்றும் அன்பழகன் ஆகியோரிடமிருந்து ஒன்பதரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். அவா்களை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.