புதுச்சேரி ஜிப்மர் ரத்த வங்கிக்கு என்.ஐ.டி. மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம்
By DIN | Published On : 02nd February 2019 01:06 AM | Last Updated : 02nd February 2019 01:06 AM | அ+அ அ- |

காரைக்கால் என்.ஐ.டி. மாணவர்கள், பேராசிரியர்கள் ஜிப்மர் ரத்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை ரத்த தானம் செய்தனர்.
காரைக்காலில் செயல்பட்டுவரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) இயக்குநர் கே. சங்கரநாராயணசாமி அறிவுறுத்தலின்பேரில், நிறுவனத்தில் ரத்த தான தேசிய சேவை திட்டம் என்.எஸ்.எஸ். மாணவர்களின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ரத்த தானம் செய்யும் வகையிலான முகாம் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், புதுச்சேரி ஜிப்மர் ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர் செளம்யா தாஸ் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.
பேராசிரியர்கள், மாணவர்களிடமிருந்து 60 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த தானத்தின் சிறப்புகள் குறித்தும், ரத்த தானம் செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மாணவர்களின் பங்கு குறித்தும் ஜிப்மர் குழுவினர் வலியுறுத்தி பேசினர். என்.ஐ.டி. பதிவாளர் ஜி. சீத்தாராமன் பங்கேற்று அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை அம்ரித பீடே, ஜி. கோப்பெருந்தேவி, கோவிந்தராஜ் உள்ளிட்ட உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.