சுடச்சுட

  

  கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலம் புதுச்சேரி: முதல்வர் வி. நாராயணசாமி பெருமிதம்

  By DIN  |   Published on : 12th February 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது என முதல்வர் வி. நாராயணசாமி பெருமிதம் தெரிவித்தார். 
  காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் 3 வகையான இளநிலை பட்டப் படிப்புகளும், 6 வகையான முதுநிலைப் பட்டப் படிப்புகளும் உள்ளன. இடப்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் ரூசா திட்டத்தில் ரூ.1.88 கோடியில் மகப்பேறு மருத்துவமனை எதிரில் இக்கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி புதிய கட்டடத்தை திறந்துவைத்துப் பேசியது:
  புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே  கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலமாகத் திகழ்கிறது. அனைத்துப் பிராந்தியங்களிலும் உயர்கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்கள் சிறந்த கல்வி கற்கும் வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம் உதவிகளை செய்துவருகிறது.
  மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 7 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றது. அதுபோல காவல் நிலையங்கள் என பல்வேறு அமைப்புகள் சிறந்த விருதுகளை பெற்றுள்ளன. 
  புதுச்சேரியில் ஒவ்வொரு அமைப்புகளும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. கல்விக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம்  தருகிறதோ அதை மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். கல்வியால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை மாணவர்கள் உணர்ந்து கல்வி கற்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளதை பயன்படுத்திக்கொள்ள
  வேண்டும் என்றார்.
  வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது:  காரைக்கால் அவ்வையார் கல்லூரியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு முந்தைய அரசு முயற்சி மேற்கொண்டு, அதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து வந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. எங்கள் அரசு பொறுப்பேற்றதும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் இந்தக் கட்டடம் அமைந்த இடம் விரிவாக உள்ளதால், மேலும் கூடுதல் கட்டடம் கட்டி, வேலைவாய்ப்புக்கான பாடங்களை கொண்டுவரவேண்டும். புதிதாக மேலும் ஒரு மகளிர் கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
  இதற்கு பதிலாக, இந்த இடத்திலேயே கூடுதல் கட்டடம் கட்டி, வேலைவாய்ப்புக்குரிய பாடங்களை கொண்டுவரமுடியும். இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்கித்தரவேண்டும். 
  கஜா புயலில் பாதிப்புக்கு 3 மாதம் கழித்து தற்போதுதான் மத்திய அரசு ரூ.13 கோடி தந்துள்ளது. ஆனால் மாநில அரசு உடனடியாக ரூ.10 கோடியை ஒதுக்கி நிவாரணம் வழங்கியது. காரைக்காலில் ரூ.52 கோடியில் புதிய குடிநீர் குழாய் பதிப்புப் பணி, சுதேசித் திட்டத்தில் ரூ.10 கோடியில் கோயில் பகுதி மேம்பாடு, ரூ.11 கோடியில் திருநள்ளாறு- அம்பகரத்தூர் சாலைப் பணி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த ஓராண்டில் ரூ.10 கோடியில் காரைக்காலில் சாலைகள் போடப்பட்டுள்ளன. நெருக்கடியான நிலையிலும் அரசு எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை மக்கள் நினைத்து, முதல்வருக்கு உரிய தருணத்தில், உரிய ஆதரவை தரவேண்டும் என்றார் அவர்.
  நிகழ்ச்சியில் நலத் துறை அமைச்சர் எம். கந்தசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன்,  அரசு செயலர் அ. அன்பரசு, ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம்,  கல்லூரி முதல்வர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai