சுடச்சுட

  

  காரைக்கால் வாஞ்சியாற்றுப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது: புதுச்சேரி முதல்வர் திறந்துவைத்தார்

  By DIN  |   Published on : 12th February 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் வாஞ்சியாற்றின் குறுக்கே புதிதாக ரூ. 6.50 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
  காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து தருமபுரம், புதுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாஞ்சியாற்றை கடந்து செல்ல வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 
  போக்குவரத்து நெரிசல், மேற்கண்ட கிராமப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அமைந்தது, சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயிலும் தனியார் பள்ளி அந்த பகுதியில் செயல்படுவது உள்ளிட்ட காரணங்களால், இப்பாலத்துக்கு அருகே புதிதாக பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை புதுச்சேரி அரசுக்கு வைக்கப்பட்டது.
  கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.  உடனடியாக பொதுப்பணித் துறை நிர்வாகம் கட்டுமானத்தையும் தொடங்கியது.  ரூ. 65.53 கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 
  லெமேர் பாலம் என்று கூறக்கூடிய தற்போதைய பாலத்துக்கு சுமார் 50 மீட்டர் அருகே 66 மீட்டர் நீளத்திலும், 7.50 மீட்டர் அகலத்திலும் பாலம் கட்டுமானம் 2016-ஆம் ஆண்டு மத்தியில் முடிக்கப்பட்டது. இந்த பாலத்துக்கு இணைப்பாக, டூப்ளக்ஸ் வீதியிலிருந்து பாலம் அருகே சுமார் 200 மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கப்படும் பணி மட்டுமே எஞ்சியிருந்தது. இணைப்புப் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு, அண்மையில் மேற்கொண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
  காரைக்காலில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் திங்கள்கிழமை வந்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர். கமலக்கண்ணன், எம். கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
  பழைமையான வாஞ்சியாற்றின் குறுக்கே உள்ள பாலத்திலும், தற்போது திறக்கப்பட்ட புதிய பாலத்திலும் போக்குவரத்து இனி நடைபெறுமென்பதால், நீண்ட காலமாக இந்த வட்டாரத்தில் நிலவிவந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் சூழல் உருவாகியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai