காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற மோடிக்குத் தகுதி இல்லை: முதல்வர் வி. நாராயணசாமி

பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதபோது,  காங்கிரஸ் கட்சி மீது

பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதபோது,  காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு கூற பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை  என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார். 
காரைக்காலில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :  திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு சுமார் ரூ.1.50 கோடி செலவில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வாஞ்சியாற்றின் குறுக்கே நபார்டு வங்கி நிதியுதவி ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும், ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி கூடுதல் கட்டடத்தையும் திறந்துவைத்துள்ளோம். 
புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சர்ச்சை இருந்துவருகிறது. திங்கள்கிழமை முதல் தலைக்கவசம் அணியவேண்டும் என காவல்துறைத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு சாலைப் பாதுகாப்பு வார விழாவில் நான் பேசும்போது, தலைக்கவசம் அணியவேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. இதை நடைமுறைப்படுத்தத் தேவையான விழிப்புணர்வை காவல் துறை, போக்குவரத்துத் துறை எடுக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், மகளிர்,  இளைஞர்கள் என அனைத்துத் தரப்பிலும் இது மேற்கொள்ளவேண்டும். படிப்படியாக தலைக்கவசம் அணியும் நிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள் என்றேன்.
ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் காவலரைப்போல இந்த விவகாரத்தில் செயல்படுகிறார். இந்த விவகாரத்தில் உத்தரவிட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரிகளை மிரட்டி செயல்படும் போக்கால் புதுச்சேரியில் ஒருவித கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தலைக்கவசத்தை நடைமுறைப்படுத்த விதிகள் உள்ளன. அதை அரசு செய்யவேண்டுமே தவிர, துணை நிலை ஆளுநர் செய்யக்கூடாது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதற்கு உதாரணமாக கட்சி உறுப்பினர்களை தீவிரமாக சேர்க்கும் விதத்தில் சக்தி செயலி உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நிலைகளில் கிராம அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பணிகள் நடைபெறுகின்றன. கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.1,670 கோடி புதுச்சேரி அரசு கேட்டது. ஆனால் ரூ.13 கோடி மட்டுமே அளித்துள்ளது. இதற்கு முன்பாகவே புதுச்சேரி அரசு ரூ.10 கோடியை நிவாரணமாக உரியவர்களுக்கு வழங்கிவிட்டது. ரூ.13 கோடி செலவிடவில்லை என்பது குறித்து கேள்வி கேட்கும் பாஜக, ரூ.10 கோடியை மாநில அரசு செலவிட்டதை மறந்துவிட்டதா ? இந்த ரூ.13 கோடியும் மாநில அரசு எடுத்த முயற்சியால் கிடைத்தது.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிரந்தர கட்டடம் அமைய ரூ.400 கோடியை ஜிப்மர் தலைமையகம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் படிப்படியாக பணிகள் நடைபெறும். ரூ.30 கோடி ஜிப்மர் ஒதுக்கிய நிதியில் காரைக்கால் மருத்துவமனை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பணியை மத்திய பொதுப்பணித் துறை ஏற்றுள்ளது என்றார்.
கடல் முதல் வானம் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதாக திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளாரே என அவரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, நரேந்திரமோடி ஆட்சியிலேயே ரஃபேல் விமான ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சி செய்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி ஊழல், ராஜஸ்தானில் சுரங்க ஊழல்  குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்தபோது, எந்த நடவடிக்கையையும் எடுக்காத நரேந்தர மோடி, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுக் கூற எந்த தகுதியும் கிடையாது. தோல்வி பயத்தில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை வைத்து எதிர்க்கட்சியினரை மிரட்டிவரும் போக்கைத்தான் நரேந்திரமோடி செய்துவருகிறார். மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com