சுடச்சுட

  

  மாசி மகம்: திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பெருமாள் தீர்த்தவாரி: 19-இல் நடக்கிறது

  By DIN  |   Published on : 13th February 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாசி மகத்தை முன்னிட்டு திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சி பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது.  
  காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாசிமகத் திருவிழாவில், பல்வேறு  கோயில்களில் இருந்து பெருமாள் ஒருங்கிணைந்து சமுத்திரத் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
  இதற்காக பெருமாள் கோயில்களில் பிரமோத்ஸவம், மாசிமக உத்ஸவம் என்ற பெயரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
  திருமலைராயன்பட்டினத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி பெருமாள்கள் ஒருசேர சமுத்திரத் தீர்த்தவாரியும், மண்டபத்தூர் கடற்கரையில் காரைக்காலில் பல சிவன் கோயில்களில் இருந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெறும். எனினும், திருமலைராயன்பட்டினத்தில் நடைபெறும் பெருமாள்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொள்வர். 
  இதையொட்டி, நாகை மாவட்டம், திவ்யதேச வரிசையில் உள்ள திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கோயிலில் இருந்து, பல்லக்கில் பெருமாள் திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்கு 19-ஆம் தேதி  பகல் 12 மணியளவில் எழுந்தருள்கிறார்.  அங்கு தங்க கருட வாகனத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, பவழக்கால் சப்பரத்தில் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு திரளான பக்தர்கள் சூழ பெருமாள் சென்றடைகிறார்.
  அங்கு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், ஸ்ரீ ரகுநாதப் பெருமாள், திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்  ஒருசேர, கடலில் இறங்கி தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
  இதில் பங்கேற்றும் பக்தர்கள், பெருமாள்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்தும், ஏராளமான பழங்கள் படைத்தும் அர்ச்சனைகள் செய்து வழிபாடு மேற்கொள்வர்.
  இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த கோயில்களின் நிர்வாகம் சார்பிலும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அரசு நிர்வாகம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai