சுடச்சுட

  

  40 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறும்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலர் அப்சரா ரெட்டி

  By DIN  |   Published on : 13th February 2019 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக கூட்டணி கைப்பற்றும் என அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலர் அப்சரா ரெட்டி கூறினார்.
  காரைக்காலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒடுக்கப்பட்ட சமூகமான திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனக்கு மகிளா காங்கிரஸில் பொறுப்பு அளித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டலில் தமிழகம், புதுவையில் தீவிர பிரசாரம் மேற்கொள்வேன். அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஊழல் கட்சிகளாகும். இதனாலேயே இவர்கள் கூட்டணிக்கு முயற்சிக்கிறார்கள். இவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். 40 தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுகவே கைப்பற்றும்.
  பெண்கள் அரசியலுக்கு வருவது குறித்தும், பிரியங்கா காந்தி வதேரா குறித்தும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமியின் கருத்துகளை யாரும் ஏற்க மாட்டார்கள். அவரை ஒரு பொருட்டாவே யாரும் கருத மாட்டார்கள். பெண்களை வலிமை மிக்கவர்களாக உருவாக்கினால்தான் வளமான தேசம் உருவாகும். அதற்கான வகையில் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
  காங்கிரஸ் கட்சி ஊழல் தொடர்புடையது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தது முதல் அறிவியல் பூர்வமான ஊழல் செய்து மக்களை ஏமாற்றி வருபவர் மோடிதான். நாடாளுமன்றத்தில் ரஃபேல் விமான ஊழல் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு அரசு தரப்பு சரியான பதில் தரவில்லை. மாறாக கேள்வி கேட்போர் மீது கோபம் கொண்டு எதிர் கருத்துரைக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்ற மோடி, வேலையிழப்புக்கு பெரும் காரணமான செயல்களை செய்துள்ளார். தமிழகத்திலேயே அவரது வருகைக்கு கருப்புக் கொடி காட்டப்படுகிறது. தேர்தல் காலம் என்பதால் இனி தேசம் முழுவதும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கும்.
  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காவல் துறை அதிகாரியாக இருந்தவர். அவர் இதுபோன்ற பதவிக்கு வந்திருக்கக் கூடாது. புதுவையில் பொங்கல், தீபாவளிக்கு அரசின் இலவசத் திட்டங்களை தடுத்து நிறுத்தியவர். விளம்பரத்துக்காகவே ஒவ்வொரு நாளும் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. மக்கள் பிரச்னைகள் மீது அவருக்கு அக்கறை இல்லை. சபரி மலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது. ஆனால், சபரி மலையில் பாஜகவினர் செயல்பாடுகள்தான் அரசியலாக்கப்படுகிறது என்றார் அவர்.
  பேட்டியின்போது, தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai