ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள்: முதல்வர் வி. நாராயணசாமி தொடங்கி வைத்தார்

ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் கிராமப்புற அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள

ஆசிரியர்களின் நிதிப் பங்களிப்புடன் கிராமப்புற அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறைகளை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து, ஆசிரியர்களைப் பாராட்டினார்.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில், இந்த பாடத் திட்டத்திற்கேற்ப அரசு உதவி,  நிறுவனப் பங்களிப்பு மூலம் சில வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படுகின்றன.
திருநள்ளாறு கொம்யூன், பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளியில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 3 வகுப்பறைகளை பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சொந்த நிதி ரூ.75 ஆயிரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றினர்.
இந்த வகுப்பறைகளை திறந்துவைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, பொலிவுறு வகுப்பறைகளை பண்டாரவாடை கிராமப் பள்ளியில் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், அரசு செயலர் அ. அன்பரசு, முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, வட்ட துணை ஆய்வாளர் எஸ். கார்த்திகேசன், சமக்ரா சிக்ஷா திட்ட காரைக்கால் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கே. ராஜசேகரன், ஆசிரியர் நலச் சங்க முன்னாள் தலைவர் ஜி. காமராஜ் என்கிற சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு விருதுகளை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி வழங்கிப் பாராட்டினார். மேலும், பள்ளி நிர்வாகத்தினரின் பணியைப் பாராட்டிய முதல்வர், இதுபோல பிற பள்ளிகளிலும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார். கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆசிரியர்களை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனும் பாராட்டினார்.
இந்த திட்டம் குறித்து பள்ளி பொறுப்பாசிரியர் மா.செல்வராஜ் கூறியது:
ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் போதிக்க முடிகிறது.  புரொஜெக்டர் மூலம் பாடத்தை திரை வடிவில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறோம். 
இந்தப் பள்ளியை பொருத்தவரை ஸ்மார்ட் ஃபோன் மூலமாக போதிக்கப்படுகிறது. தேவையான பதிவுகளை போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு பாடம் நடத்துகிறோம். 1-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பார் கோடு தரப்பட்டுள்ளது. இந்த பார் கோடை ஸ்கேன் செய்துகொண்டால், அதில் பதிவானப் பாடம் புரொஜெக்டரில் தெரியவருகிறது. மாணவர்கள் நல்ல முறையில் இதனை புரிந்துகொள்கிறார்கள். மாணவர்கள் சுயமாக கருத்துகளை உருவாக்கும் திறன் பெறுகிறார்கள். அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள், நகர்புறத்தில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிகராக உருவாகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com