காக்கமொழி கார்கோடகபுரீசுவரர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி வழிபாடு
By DIN | Published On : 14th February 2019 08:29 AM | Last Updated : 14th February 2019 08:29 AM | அ+அ அ- |

காரைக்கால் அருகே பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கார்கோடகபுரீசுவரர் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சி பரிகார ஹோமம், சிறப்பு ஆராதனை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அருகே நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கார்கோடகபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சிதிலமடைந்து பராமரிப்பின்றிப் போனது.
கிராமத்தினரின் முயற்சியால் புதுச்சேரி அரசு நிதி மற்றும் நன்கொடைகள் மூலம் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது.
கார்கோடகன் என்ற கொடிய விஷப் பாம்பு, இக்கோயில் சிவலிங்கத்தை வழிபாடு செய்து மோட்சம் அடைந்ததாகவும், நளச்சக்கரவர்த்தி பல சிவாலயங்கள் சென்று தரிசித்து வந்த நிலையில், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபாடு செய்து பின்னர் திருநள்ளாறு சென்றதாக கூறப்படுகிறது. பாம்பு விமோசனம் அடைந்த தலம் என்பதால் இது ராகு - கேது தோஷ நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் விளங்குவதாக கூறப்படுகிறது. திருப்பணிகள் நடந்துவரும் நிலையில், ராகு கடகத்திலிருந்து மிதுனத்துக்கும், கேது மகரத்திலிருந்து தனுசு ராசிக்கும் புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு பிரவேசிக்கப்பட்டதையொட்டி, ராகு - கேது பெயர்ச்சி பரிகார வழிபாடு கோயிலில் நடத்தப்பட்டது.
இதற்காக கோயில் வளாகத்தில் 12 மணியளவில், பக்தர்கள் ராசிகளை சொல்லி சிறப்பு பரிகார ஹோமம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டது.
ஹோம குண்டம் அருகே வைக்கப்பட்ட புனிதநீர் கடம் புறப்பாடாகி, சுவாமிக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு பிற்பகல் 2.02 மணிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு பிரசாதங்கள் விநியோகிப்பட்டன.
ஹோம வழிபாட்டில் நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர். காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நவகிரகங்களில் உள்ள ராகு -கேதுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.