காரைக்கால் ஆட்சியர் வசமே திருநள்ளாறு கோயில் நிர்வாகம்: துணை நிலை ஆளுநருக்கு போராட்டக் குழு வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வசமே திருநள்ளாறு கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வசமே திருநள்ளாறு கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக இருக்கவேண்டும். இதன்மீது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் போராட்டக் குழு நிறுவனரும், அமைப்பாளருமான வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் புதன்கிழமை கூறியது:  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நிர்வாக அதிகாரியாக பிசிஎஸ் என்கிற மாநில நிர்வாகத்தின் அதிகாரியும், தனி அதிகாரியாக மாவட்ட ஆட்சியரும் இருப்பது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை இருந்த நிலையாகும். திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் என்பது 100 சதவீதம் அரசுடையது அல்ல. அரசு, தருமை ஆதீனம், ஸ்தானிகர் என தலா 33 சதவீதம் பங்களிப்புடன் உள்ளதாகும். எனவே, இவற்றையெல்லாம் அனுசரித்து நடுநிலையாக ஒரு கோயில் நிர்வாக அதிகாரி செயல்படுவது என்பது இயலாத ஒன்றாகும். சில அதிகாரிகள் காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு வாதங்களுக்கெல்லாம் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த சூழலில் மாவட்ட சார்பு ஆட்சியராக இருந்த ஏ.விக்ரந்த் ராஜா ஐ.ஏ.எஸ். என்பவரிடம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தை கூடுதலாக அரசு ஒப்படைத்தது. இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர், பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தினார். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் பாலாலயம் செய்து நிகழாண்டு பிப்ரவரி மாதம் கோயிலுக்கு குடமுழுக்கு  விழாவையும் பிரச்னைகள் ஏதுமின்றி நடத்தி முடித்துள்ளார்.
இக்கோயில் நிர்வாகத்தை ஓரளவு கடந்த ஒன்றரை ஆண்டில் புரிந்துகொண்டு அவரால் நடத்த முடிந்துள்ளதோடு, பல்வேறு சீர்திருத்தங்களையும் கோயிலில் எடுத்து நிறைவேற்றியுள்ளார். இதில் சில ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில் அதை சரிசெய்துவிட முடியும். இப்போது சார்பு ஆட்சியராகவும், கோயில் நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டவரை நிரந்தரமாக மாவட்ட ஆட்சியராக புதுச்சேரி அரசு நியமித்துள்ளது. புதிதாக கோயிலுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமித்தாலும் அல்லது பிசிஎஸ் நிலை அதிகாரி நியமித்தாலும், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அடைந்த சீர்திருத்தங்கள் இனி தொடருமா என்பது கேள்விக்குறிதான். கோயிலின் அனைத்து நிலைகளையும் ஒரு அதிகாரி புரிந்துகொண்டு, கொள்கை உறுதியுடன்  நிர்வகித்தால் மட்டுமே சீர்திருத்தங்களும், நடுநிலையோடும், பிரச்னைகளின்றியும் நிர்வாகத்தை கொண்டு செல்லமுடியும்.
புதிதாக நியமிக்கப்படும் அதிகாரியால் இவற்றை, இப்போதைய நிலையிலேயே தொடரச் செய்வது முடியாத ஒன்றாகும். திருநள்ளாறு கோயில் என்பது சனிப்பெயர்ச்சி விழா மட்டுமல்லாது, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தலமாக விளங்குகிறது. எனவே, மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும் நபரிடமே கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பை நிரந்தரமாக ஒப்படைக்கவேண்டும். புதிதாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டால் இவர்களிடையே முரண்பாடுகள் தோன்றிவிடும். எனவே ஆட்சியராக விக்ரந்த் ராஜா நீடிக்கும் வரை, கோயில் தனி அதிகாரி, கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பை அவரே நிர்வகிக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com