பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்:அரசு ஊழியர் சம்மேளனம், வணிகர் சங்கம் ஆதரவு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்போருக்கு, அரசு ஊழியர் சம்மேளனம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
கடந்த 1.1.2017 முதல் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பைப்  பெற வேண்டும். 2-ஆவது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.  பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரங்களின் பராமரிப்பில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம், மார்க்கெட் வீதியில் உள்ள சந்தாதாரர்கள் சேவை மையம் மற்றும் பிற இடங்களில் உள்ள இணைப்பக அலுவலகத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டு, கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவத் தலைவர் ஜெயசிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் மற்றும் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் ஜெ. சிவகணேஷ், துணைத் தலைவர் கே.ஆர்.காசிநாதன், பொருளாளர் இளவரசன், முன்னாள் தலைவர் பி.எஸ்.ஆர்.சின்னையன் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், என்.எஃப்.டி.இ. சங்கப் பிரதிநிதி இருதய சவுரிராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மத்திய அரசு எவ்வாறெல்லாம் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை நலிவடையச் செய்கிறது என்ற பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டம் 2 நாளாக நடைபெற்றதில், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவையில் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக குறைபாடு ஏற்பட்டது. கட்டணம் செலுத்த முடியவில்லை,  தொலைபேசி துண்டிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியவில்லை. செல்லிடப்பேசி கோபுரங்கள் பராமரிப்பின்மையால் பல இடங்களில் சிக்னல் கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com