முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க காங்கிரஸ் துணை நிற்கும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேச்சு
By DIN | Published On : 28th February 2019 05:55 AM | Last Updated : 28th February 2019 05:55 AM | அ+அ அ- |

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என்.எஃப்.டி.இ. - பி.எஸ்.என்.எல். தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம், குடந்தை மாவட்டம் சார்பில் 3-ஆவது மாவட்ட மாநாட்டில் மேலும் அவர் பேசியது: சுதந்திரப் போராட்டம் காங்கிரஸ் தலைமையில் மிதவாத போக்கினாலும், கம்யூனிஸ்ட் தலைமையில் வலிமை மிக்க போராட்ட போக்கினாலும் நாடு விடுதலை பெற்றது. சுதந்திர இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்ற ஜவாஹர்லால் நேரு, இந்தியா தொழிலாளர்கள் கொண்ட நாடு. உழைப்பாளியால்தான் நாடு முன்னேற்றத்தை அடையமுடியுமென கருதி, நாட்டின் வேகமான வளர்ச்சிக்காக நவ வீரர்கள் என்ற குழுவை அமைத்து, இவர்களது பரிந்துரையின்பேரில் அரசுத் துறைகள் அல்லாது பொதுத் துறை நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
அரசின் மூலதனத்தினாலும், தொழிலாளர்களின் உழைப்பாலும் அரசுத் துறைகளைக் காட்டிலும் பொதுத் துறை நிறுவனங்கள் வளத்தைத் தரும் என அவர் நம்பினார். ஓ.என்.ஜி.சி. போன்ற சில பொதுத் துறை நிறுவனங்கள் இயற்கையிலேயே நல்ல லாபமீட்டுவதாக அமைந்துவிட்டது. சில நிறுவனங்கள் மிதமான நிலையில் உள்ளன. காங்கிரஸ் ஆளும் நிலை வரை பொதுத் துறை நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத போக்கில் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இதை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இதுபோன்ற பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் வகையில் மத்திய அரசின் போக்கு உள்ளது. ஆனால், காங்கிரஸ் பேரியக்கம் இதற்கு எந்த தருணத்திலும் உடன்படாது. சுமார் 10 ஆண்டு காலம் பல்வேறு புரிதல்களை உணர்ந்து, நல்ல அனுபவமிக்கவராக ராகுல்காந்தி காங்கிரஸ் பேரியக்கத் தலைவராக பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திரமோடியின் ரஃபேல் போர் விமான தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில், மத்திய அரசு எவ்வாறு முதலாளித்துவத்தை நாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறது என்பதை தெளிவாக ராகுல்காந்தி பேசிவருகிறார். நல்ல தலைவர் கிடைத்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். பொதுத் துறை நிறுவனங்களை அரசு செல்லப்பிள்ளையாக பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, நலிவடைய அனுமதிக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி பெரிதும் துணை நிற்கும் என்றார் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்.
மாவட்டத் தலைவர் சி. கணேசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை என்.எஃப்.டி.இ. மாவட்ட செயலர் எம்.விஜய்ஆரோக்கியராஜ் தொடங்கிவைத்தார். மாவட்டத் தலைவர் பி. காமராஜ் புதிய மாற்றமும் 4 ஜி அலைக்கற்றையும் என்ற தலைப்பில் பேசினார். வரவேற்புக் குழுத் தலைவர் எஸ். இருதயசவுரிராஜ் தியாகிகள் அஞ்சலி செலுத்தினார். பொதுத் துறை காக்கும் அரசியல் தேர்வு செய்வோம் எனும் தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.விஸ்வநாதன் பேசினார். மத்திய சங்க சிறப்பு அழைப்பாளரான ஏ. செம்மல் அமுதம், என்.எஃப்.டி.இ. மாநில செயலர் கே.நடராஜன் ஆகியோர் பேசினார். முன்னதாக வரவேற்புக் குழு செயலர் எம். பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறைவாக ஆர். பிரகாஷ் நன்றி கூறினார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.