முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
புதுவை - டென்மார்க் மாணவர்களிடையே கலந்துரையாடல் திட்ட ஆலோசனை
By DIN | Published On : 28th February 2019 05:58 AM | Last Updated : 28th February 2019 05:58 AM | அ+அ அ- |

புதுவை - டென்மார்க் தொழில்நுட்பக் கல்வி மாணவர்களிடையே விடியோ முறையில் கலந்துரையாடல் செய்வதற்கான முதல்கட்ட ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது.
டென்மார்க் நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி மாணவர்களும், புதுவை மாநிலத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்வி மாணவர்களும் "ஸ்கைப்' விடியோ அழைப்பு முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட சினேகா நிறுவனத்தின் சார்பில், டென்மார்க்கிலிருந்து ஹேன் ஜேக்கப்சன் என்பவரும், சினேகா நிறுவனத்தைச் சேர்ந்த ஜேசுரத்தினம் மற்றும் நிர்வாகி எஸ். ராஜேந்திரன் ஆகியோர் காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதன்கிழமை சென்றனர்.
கல்லூரி முதல்வர் சந்தனசாமி மற்றும் துறைத் தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, டென்மார்க்கில் உள்ள "சீனியர் வித்தவுட் பார்டர்' என்ற நிறுவனத்திலிருந்து "யங் டூ யங்' என்ற திட்டத்தின்கீழ், அங்குள்ள மாணவர்களும், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் கலந்துரையாடல் செய்யும் திட்டம் குறித்து டென்மார்க் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி விளக்கினார்.
மேலும், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சந்தனசாமி, கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள், மாணவர்களின் திறன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விளக்கினார். இதைத் தொடர்ந்து, கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் இக்குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு சுய சிந்தனை, நீடித்த நிலையான அறிவாற்றல் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிந்துகொள்வதோடு, அறிவாற்றலை பெருக்கிக்கொள்ள முடியும். கருத்துப் பரிவர்த்தனை இரு நாட்டினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும்போது, உலகளாவிய தொழில்கல்வி நிலை குறித்து அறிந்திருப்பதோடு, எங்கும் சாதனை நிகழ்த்தும் திறனைப் பெறுவர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், 3 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும் என டென்மார்க் பிரதிநிதி தெரிவித்தார். ஜூன், ஜூலை மாத வாக்கில் அடுத்தகட்ட நிகழ்வுகள் இருக்கும். புதுச்சேரி அரசின் ஒப்புதலுக்குப் பின் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார் அவர்.