கடற்கரைத் திருவிழா கோலப் போட்டி

காரைக்காலில் பொங்கல் விழாவாக வியாழக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ள கடற்கரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.

காரைக்காலில் பொங்கல் விழாவாக வியாழக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ள கடற்கரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
காரைக்காலில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் செயலர் இசட்.எம். அல்தாஹீர் ஏற்பாட்டில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாள்களில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் விழா நடத்துவது வழக்கம். 
 நிகழாண்டுக்கான நிகழ்ச்சியையொட்டி, காரைக்கால் நேரு வீதியில் கோலப் போட்டி நடைபெற்றது. காலை 7 முதல் 10 மணி வரை போட்டி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வண்ணமிகு கோலமிட்டனர். சிலர் கோலத்தின் மீது அகல் விளக்கேற்றி கோலத்துக்கு மெருகேற்றினர். மகளிர் குழுவினர் நடுவர்களாக நியமிக்கப்பட்டு சிறந்த கோலங்கள் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டன. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா சிறப்பு அழைப்பாளராக போட்டி நடைபெறும் இடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். கோலப் போட்டியை அவர் பார்வையிட்டு, போட்டியில் பங்கேற்றோருக்கும், போட்டி ஏற்பாட்டாளருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இதுகுறித்து, போட்டி ஏற்பாட்டாளர் அல்தாஹீர் கூறியது: கோலப் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு மூன்று நிலையில் பரிசு வழங்கப்படுகிறது. காணும் பொங்கல் நாளான வியாழக்கிழமை பகலில் கடற்கரையில் பட்டம் விடும் போட்டி நடத்தப்படுகிறது.
 மாலை நிகழ்வாக பரிசளிப்பு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறுகிறது. கடற்கரைத் திருவிழாவாக பல நிகழ்வுகள் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கடற்கரையில் திரளும் நாளாக இருப்பதால், இந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com