தான்தோன்றீசுவரர் கோயிலில் ஜன.30 -இல் குடமுழுக்கு விழா

திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ தான்தோன்றீசுவர சுவாமி கோயிலில்

திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ தான்தோன்றீசுவர சுவாமி கோயிலில் ஜன. 30-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டு, இதன் சார்பு கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலமாகவும், சப்தவிடங்க தலமாகவும் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. இக்கோயில் வீற்றிருக்கும் பகுதிக்கு மேற்கேயும், பிரசித்திப் பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன்  கோயிலுக்கு தென்கிழக்காகவும் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீதான்தோன்றீசுவரர் (சுயம்புநாத சுவாமி) கோயில் அமைந்திருக்கிறது.
கோயில் கல்வெட்டு குறிப்புகள் மூலம் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக தகவல் தெரிய வருகிறது. கோயிலில் மூங்கிலை தலவிருட்சமாக கொண்டு லிங்கம் சுயம்புவாக காட்சித் தருவதால் ஸ்ரீதான்தோன்றீசுவரர் கோயில் என்று பெயர் விளங்குகிறது. புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவர், அம்பாள் சன்னிதி மற்றும் சிவன் கோயிலில் அமைந்திருக்கக்கூடிய அனைத்து பரிவாரத் தெய்வங்களின் சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. இக்கோயிலில் அமாவாசை தினத்தில் ஸ்ரீ சுயம்புநாத சுவாமிக்கு வெண்ணெய் சாற்றி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு அன்னதானம் நடைபெறுவது சிறப்புக்குரியதாக உள்ளது.
பிரதானமாக விளங்கக்கூடிய இக்கோயிலின் சார்பு கோயில்களாக ஸ்ரீஅய்யனார், ஸ்ரீவெள்ளந்தாங்கி விநாயகர், ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீபிடாரி அம்மன் ஆகிய தனி கோயில்கள் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளன.
இவைகளுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம், கிராமத்தினர் முடிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகளை புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதலின்படி தொடங்கினர். திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஜன. 30-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, கோயில் தனி அதிகாரி ஜி. இளஞ்செழியன் கூறியது :நூற்றாண்டுகள் பழைமையான, மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக ஸ்ரீ தான்தோன்றீசுவரர் கோயில் விளங்குகிறது. திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், கோயிலுக்கு புதிதாக 3 நிலை ராஜகோபுரம் கட்டவும் முடிவு செய்து பணிகள் நிறைவுபெற்றுள்ளன. சார்பு கோயில்களில் முழுமையான சீரமைப்புப் பணிகள், சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் புதிதாக மண்டபம் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து 28 ஆண்டுகளாவதாக குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. சுமார் ரூ.1 கோடி செலவில் கோயில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்குக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார சன்னிதிகளின் விமானம், சார்பு கோயில்களின் விமானங்களுக்கென 25 கலசங்கள் புதிதாக்கப்பட்டுள்ளன.  விக்ரஹங்கள் பலவும் புதுப்பிக்கப்பட்டு மருந்து சாற்றுதலுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன. திருப்பணிக் குழுவினர், கிராமத்தினர், புதுச்சேரி அரசு நிர்வாகம், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் ஆதரவில் திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
ஜன. 27-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்குக்கான பணிகள் தொடங்குகின்றன. 28-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 29-ஆம் தேதி 2 மற்றும் 3-ஆம் கால பூஜையும், 30-ஆம் தேதி 4-ஆம் கால பூஜை செய்து மகா பூர்ணாஹூதி தீபாராதனையுடன் கடம் புறப்பாடு செய்து, காலை 6.10 மணிக்கு ஸ்ரீஅய்யனார் கோயில், 6.30 மணிக்கு ஸ்ரீ வெள்ளந்தாங்கி விநாயகர்கோயில், 6.50 மணிக்கு ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் கோயில், 7.15 மணிக்கு ஸ்ரீ பிடாரி அம்மன் கோயில், 9.05 மணிக்கு பிரதான கோயிலுக்கான யாகசாலை பூர்ணாஹூதி செய்து காலை 10.10 மணிக்கு ஸ்ரீ தான்தோன்றீசுவரர் கோயில் குடமுழுக்கு செய்யப்படுகிறது. முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர் என்றார் இளஞ்செழியன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com