நேரு யுவகேந்திரா சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 24th January 2019 01:28 AM | Last Updated : 24th January 2019 01:28 AM | அ+அ அ- |

காரைக்காலில் உள்ள பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா புதன்கிழமை பல்வேறு போட்டிகளுடன் நடத்தப்பட்டன.
நேரு யுவகேந்திரா மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் மகளிர் முன்னேற்ற மையம் இணைந்து காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவை நடத்தியது.
நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பாரத் தலைமை வகித்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்றை விளக்கியும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு குறித்தும் விளக்கி, மாணவர்கள் அனைவரும் அவரது பெருமைகளை அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
பள்ளி முதல்வர் கந்தசாமி, துணை முதல்வர் தே. சுமதி, தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோரும் சுபாஷ் சந்திரபோஸ் குறித்தும், மாணவர்கள் அவரைப்போல திறன் மிக்கவர்களாக வளர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினர். மாணவர்களிடையே சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் பலர் அவரது பெருமைகளையும், வீரத்தையும் விளக்கிப் பேசினர். போட்டியில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையத் தலைவர் பாரீஸ்ரவி வரவேற்றார். அன்னிபெசன்ட் அம்மையார் மகளிர் முன்னேற்ற மையம் மாவட்டத் தலைவி ஆர். மகேஸ்வரி நன்றி கூறினார்.