மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
By DIN | Published On : 24th January 2019 01:27 AM | Last Updated : 24th January 2019 01:27 AM | அ+அ அ- |

தேர்தல் கல்விக்குழு சார்பில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் தேர்தல் கல்விக் குழு சார்பில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி துணை முதல்வர் கே. கோவிந்தராஜன் தலைமை வகித்து, தேர்தல் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி சமூகவியல் துறை பேராசிரியரும், தேர்தல் ஆணையத்தின் ஸ்வீப் அமைப்பின் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான வி. லட்சுமணபதி கலந்துகொண்டு, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பிரதியை பள்ளி துணை முதல்வர் கே. கோவிந்தராஜன் பெற்றுக்கொண்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் தேர்தல் முறை, குடிமக்களின் அடிப்படைக் கடமை மற்றும் உரிமைகள், தற்கால தேர்தல் நடைமுறை, தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் முறை, மாணவர்களது கடமை, நினைவில் கொள்ள வேண்டிய தேர்தல் தொடர்பான கலைச் சொற்கள், படிவங்கள் குறித்து கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பணம் வாங்காமல் வாக்களிக்கவேண்டும், ஒருவர்கூட விடுபடாமல் வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். வலிமையான தேசத்துக்கு வாக்குக்கு அதிக வலிமை உண்டு என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என சிறப்பு அழைப்பாளர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கையேடு தயாரித்த பள்ளி விரிவுரையாளர் எஸ். சித்ராவை பள்ளி துணை முதல்வர் பாராட்டினார்.
பள்ளி அலுவலக உதவியாளர் இளமுருகு, விரிவுரையாளர் ரத்தினம், தமிழாசிரியர் வாசுகி ஜெயராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்புசாமி, சந்திரமோகன், பிரைட் அகாதெமி பள்ளி ஆசிரியர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளியின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் வேதியியல் விரிவுரையாளரும், தேர்தல் கல்விக் குழு பொறுப்பாளரும், கையேட்டு நூலாசிரியருமான எஸ்.சித்ரா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை வாசுகி ஜெயராமன் நன்றி கூறினார்.