ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இடம்: நவோதய பள்ளி மாணவருக்குப் பாராட்டு
By DIN | Published On : 01st July 2019 01:58 AM | Last Updated : 01st July 2019 01:58 AM | அ+அ அ- |

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பள்ளி மாணவருக்கு நவோதயா வித்யாலயா நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 100, காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளையில் 50 என மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் இந்த 150 இடங்களுக்கு நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர்.
அண்மையில் ஜிப்மர் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற எம்.திவாகர் என்கிற மாணவர், 2019-20-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் நடத்திய மருத்துவக் கல்விக்கான (எம்.பி.பி.எஸ்) நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று முதலாமாண்டு சேர்க்கையில் இடம்பெற்றார்.
மாணவர் எம்.திவாகர் தனது
பெற்றோருடன் நவோதயா பள்ளிக்கு சனிக்கிழமை சென்றார். அவருக்கு பள்ளி முதல்வர் பி.ஹெலன்மேரி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
மாணவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.