பெருமாள் கோயில் வெள்ளித் தேருக்கு காணிக்கை: உண்டியல் எண்ணும் பணி பாதியில் நிறுத்தம்

நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வெள்ளித்தேர் செய்வதற்கான காணிக்கைகள் எண்ணும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வெள்ளித்தேர் செய்வதற்கான காணிக்கைகள் எண்ணும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
காரைக்கால் கைலநாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கென, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தனி அதிகாரி தலைமையிலான கோயில் நிர்வாகம் மற்றும் தேர் செய்வதற்கான ஆர்வலர்கள் பங்களிப்பில் வெள்ளித் தேர் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக வெள்ளி, நிதி பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு நன்கொடையாளர்கள் உதவியில் வெள்ளித் தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டது. ஸ்தபதிகள் மூலம் மரத்தாலான பணிகள் செய்யப்பட்டு தேர் வடிவத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் வெள்ளித் தகடு பதிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காரைக்கால் கைலாசநாதர் கோயிலுக்கு அறங்காவல் நிர்வாகத்தினர் நியமிக்கப்பட்ட பின்னர், முந்தைய நிர்வாக காலத்தில் தொடங்கிய தேர் பணி, பல காரணங்களால் முடங்கியது. 
இந்த விவகாரத்தில் முந்தைய கோயில் நிர்வாகம், தேர் செய்யும் பணியில் ஈடுபட்ட ஆர்வலர்களையும், தற்போதைய கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு நிர்வாகத்தினரையும் அழைத்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தியது. எனினும், வெள்ளித்தேர் பணி முழுமையடையாமல் காலம் கடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், வெள்ளித்தேர் காணிக்கை பெறும் வகையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் நிரம்பி, காணிக்கைகள் மேலும் செலுத்த முடியாத நிலைக்கு வந்தது. உண்டியலைப் பிரித்து காணிக்கைகளைப் பத்திரப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா அனுமதியின்பேரில், கோயில் நிர்வாகம் உண்டியலை சனிக்கிழமை பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டது.
இந்த பணியில் சுமார் 15 அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணிக்கொண்டிருந்த நிலையில், ஓரிரு மாணி நேரத்தில் திடீரென பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் தரப்பில் கூறும்போது, மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்பேரில் வெள்ளித்தேருக்கான காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பணியை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் வந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டது. காணிக்கையை மூட்டைக்கட்டி லாக்கரில் வைத்துள்ளோம் என்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் செலுத்திய ரொக்கம், ஏராளமான பக்தர்கள் செலுத்திய வெள்ளிப் பொருள்களால், பக்தர்கள் பிரார்த்தனையின்பேரிலும், விழா காலங்களிலும் கோயில் பிராகாரத்தில் வெள்ளித்தேர் இழுக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. நல்ல நோக்கத்தோடு தொடங்கிய பணி பல ஆண்டுகளாக முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளது.
இது தனி நபர் விவகாரம் அல்ல. இந்த விவகாரத்தில் அரசியலும், ஈகோவும் எந்தத் தரப்புக்கும் கூடாது. நல்ல நோக்கில், பிரார்த்தனை நிறைவேற்றத்துக்காக ஏராளான பக்தர்கள் செய்த பங்களிப்பு உள்ளது.  எந்த தரப்பினராக இருந்தாலும் பெருமாள் வீற்றிருக்கக்கூடிய தேரை நல்ல முறையில் தயாரித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனை மனதில் இருக்க வேண்டும். இறைவனுக்காக தொடங்கப்பட்ட பணியில் முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து தேர் பணியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பக்தர்கள் தரப்பில்
வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com