சுடச்சுட

  

  நளன் குளம்: பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்ல விதித்த தடை அமலுக்கு வந்தது

  By DIN  |   Published on : 02nd July 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள், குளத்திலேயே ஆடைகளை விட்டுச் செல்ல விதிக்கப்பட்ட தடை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. 
  திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதும், சோப்புகள் பயன்படுத்துவதும், உடுத்தியிருக்கும் ஆடைகளை குளத்தில் விட்டுச் செல்வதுமான செயலில் ஈடுபடுகின்றனர். இதன் பிறகே கோயிலுக்குள் சென்று சனீஸ்வர பகவானை தரிசிக்கின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுகின்றனர். தவிர, சனிப் பெயர்ச்சிக் காலக் கட்டத்தில் ஏறக்குறைய 2 மாத காலம் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்குளத்தில் நீராடுவதோடு, ஆடைகளையும் குளத்திலும், குளக்கரையிலும் விட்டுச் செல்கின்றனர். இவ்வாறான நிலையில் குளத்து நீர் சுகாதாரக் கேடு அடைவதால், குளத்தில் உள்ள தண்ணீரை கோயில் நிர்வாகம் அவ்வப்போது வெளியேற்றி, குளத்தின் அருகே போடப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்புகிறது. 
  புனித தீர்த்தமாக கருதக்கூடிய குளம் மாசடைவது ஒருபுறம், நிலத்தடி நீரை கோடிக்கணக்கான லிட்டர் எடுப்பதால் நிலத்தடி நீராதாரம் குறைவது உள்ளிட்ட பல காரணங்களை கருத்தில்கொண்டு ஆராய்ந்த கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், குளத்தில் பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்ல ஜூலை 1 முதல் தடை விதிக்க முடிவு செய்து அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதில், ஆடைகளை விட்டுச் செய்ய செய்திருக்கும் மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தெரிவித்திருந்தது.
  தடை அமலுக்கு வருவதையொட்டி கோயில் நிர்வாகம் குளக்கரையில் பல இடங்களில் பெட்டிகளை ஞாயிற்றுக்கிழமை இரவு வைத்தது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீராடத் தொடங்கிய நிலையில், தடை குறித்தும், ஆடைகளை போடுவதற்கு செய்துள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பெட்டியில் ஆடைகளை போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றனர்.
  இந்த நடவடிக்கைகள் குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியது: ஆடைகளை குளத்தில் விட்டுச் செல்ல விதிக்கப்பட்ட  தடை அமலுக்கு வந்ததையொட்டி குளக்கரையில் பல இடங்களில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில்தான் ஆடைகளை போடவேண்டுமென பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதை ஏற்று பின்பற்ற தொடங்கியுள்ளனர். அதிகாலை முதல் நீராடியோரில் ஒருவர்கூட குளத்தில் ஆடைகளை விட்டுச் செல்லவில்லை.
  வருகிற சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் நீராடுவர் என்பதால், குளக்கரையில் 25-க்கும் மேற்பட்ட பெட்டிகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 25-க்கும் மேற்பட்ட சீருடையணிந்த ஊழியர்கள் பக்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை செய்வார்கள். திருநள்ளாறு பேருந்து நிலையம் முதல் சுற்றுவட்டாரத்தில் பக்தர்கள் அறியும் வகையில் தடை குறித்தும், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் விளக்கும் டிஜிட்டல் முறையிலான விளம்பரப் பதாகைகள், சுவரில் ஒட்டக்கூடிய வகையிலானவை செய்யப்படவுள்ளன. பக்தர்கள் இந்த நடைமுறையை உரிய முறையில் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai