சுடச்சுட

  

  பள்ளிகளில் மாணவர்களுக்கு பால் காய்ச்ச எரிவாயு அடுப்பு வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

  By DIN  |   Published on : 02nd July 2019 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளிகளில் மாணவர்களுக்கு பால் காய்ச்ச வழங்கப்பட்டுள்ள எரிவாயு அடுப்பு வசதியை கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
  புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படுகிறது. அதிகாலையிலேயே பள்ளிகளுக்கு பால் கொண்டு சேர்க்கப்படும்போது, அதை மண்ணெண்ணெய் பயன்பாட்டு அடுப்பில் காய்ச்சி ஊழியர்கள் மாணவர்களுக்கு வழங்கி வந்தனர். பள்ளிகளில் இந்த அடுப்புக்கு மாற்றாக எரிவாயு அடுப்பு பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்தது. 
  காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு சட்டப் பேரவைத் தொகுதி அம்பகரத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் எரிவாயு அடுப்பில் பால் காய்ச்சும் பணியை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  திட்டம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியது :  மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாற்றாக எரிவாயு உருளை பயன்படுத்தி, எரிவாயு அடுப்பு மூலம் பால் காய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் இந்த திட்டத்துக்குத் தேவையான எரிவாயு அடுப்பு மற்றும் உருளைக்கான முன் வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்தது.
  காரைக்காலில் அம்பகரத்தூர் பள்ளியில் எரிவாயு அடுப்பு வசதியில் பால் காய்ச்சுவதை அமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த வசதியின் மூலம் மாநிலத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். காரைக்காலில் மட்டும் 13,500 மாணவர்கள் பயனடைவர். காரைக்காலில் இந்த வசதி 73 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் எரிபொருள் சிக்கனமாவதுடன், பணி செய்வோரும் குறித்த நேரத்தில் பணிகளை நிறைவு செய்துவிடுவர் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai