நெடுங்காடு தொகுதியில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் மந்தம்: எம்.எல்.ஏ. புகார்

நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாகவும்,

நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாகவும், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்தவில்லை என சம்பந்தப்பட்ட தொகுதி உறுப்பினர் சந்திரபிரியங்கா கூறினார். 
இதுகுறித்து, மேலும் அவர் கூறியது: காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலைப் பணிக்கு நிதி பெறப்பட்டு சாலைப் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது. ஆனால் மற்ற பகுதி சாலைகள் மீது அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.
நெடுங்காடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலகாசாக்குடி சாலை, வடமட்டம் சாலை மற்றும் கோட்டுச்சேரி பகுதிக்குள்பட்ட பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக இருப்பதை  மேம்படுத்தவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய சாலைத் திட்ட நிதியில்  காரைக்கால் சந்தைத் திடல் முதல் பிள்ளைத்தெருவாசல் வழியாக அன்னவாசல் வரையிலும், நெடுங்காடு முதல் வடமட்டம் மற்றும் திருவேட்டக்குடி நுழைவு வாயில் முதல் கடற்கரையோர சாலை அமைப்பது உள்ளிட்ட சாலைத் திட்டங்களுக்கு ஏறக்குறைய ரூ. 25 கோடி
கிடைத்தது.
இந்த திட்டத்தில் பெரும்பாலான சாலைகள் நெடுங்காடு தொகுதிக்குள் உள்ளன. இந்த சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வோருக்கும் இந்த சாலைகள் பயனுள்ளதாக இருப்பதும் பாதித்துள்ளதால், திட்டப்பணியை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த சாலைகளை மேம்படுத்த பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், காரைக்கால் சந்தைத் திடல் முதல் பிள்ளைத்தெருவாசல் வரை குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டுமே சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலைப் பணி இந்த மார்க்கத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. பிற எந்தவொரு இடத்திலும் திட்டமிட்டவாறு சாலைப் பணிகள் மேம்பாடு தொடங்கப்படவில்லை. இந்த தடங்கலுக்கு காரணம் என்ன என்பது புரியவில்லை.
உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூரிலிருந்து வருவோருக்கு இச்சாலைகள் மேம்படுத்தப்பட்டால் பயணம் சிறப்பாக இருக்கும். நல்ல நோக்கத்துக்காக சாலை மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்த நிலையில், இவற்றை பொதுப்பணித் துறை நிர்வாகம் கிடப்பில் போட்டிருப்பது வேதனை தருகிறது.
மத்திய சாலைத் திட்ட நிதி பெறும்போது, இதே காலக்கட்டத்தில் தமிழகப் பகுதியில் பெறப்பட்ட நிதியைக்கொண்டு சாலைகள் அவ்விடங்களில் மேம்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், காரைக்காலில் மட்டும் அவ்வாறு நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com