திருநள்ளாறு கோயில் நான்கு வீதிகளில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருநள்ளாறு கோயில் நான்கு வீதிகளை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

திருநள்ளாறு கோயில் நான்கு வீதிகளை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேசுவரர் கோயிலில் மூலவர் தர்பாரண்யேசுவரர், தனி சன்னிதிகொண்டுள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நளன் குளத்தில் நீராடுதல், வடக்கு வீதி வழியே வரிசை வளாகத்தின் மூலம் கோயிலுக்கு செல்லுதல்,  பிற வழிகளில் கோயிலுக்குள் செல்லுதல் போன்றவற்றால் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாகவே காணப்படும்.
நான்கு வீதிகளிலும் வியாபார நிறுவனங்கள் பல உள்ளபோது, அவை சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை நீட்டித்தும், விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளன. பிரமோத்ஸவதத்தில் 5 தேரோட்டம் நடைபெறும் சூழலில், பக்தர்கள் மிகுதியால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால், இந்த பாதிப்பு பெருமளவு மேலோங்குகிறது.
கடந்த மாதம் பிரமோத்ஸவம் நடைபெறுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தியது. வணிகர்கள் தாமாகவே முன்வந்து சில இடங்களில் அகற்றினர். பஞ்சாயத்து நிர்வாகம் விடுபட்ட இடங்களில் அகற்றும் பணியை மேற்கொண்டது. சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்படுவது மட்டும் அதிகரிக்கத் தொடங்கின. 
பல்வேறு முறை வியாபார நிறுவனத்தினருக்கு பஞ்சாயத்து நிர்வாகம், காவல் துறை நிர்வாகம் அறிவுறுத்தியும், எதையும் அகற்றப்படாமல் இருந்ததால், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர்  வீரவல்லபன் உத்தரவின்பேரில், திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்  பிரவீன்குமார் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிரடி நடவடிக்கையாக, காவலர்களைக் கொண்டு விளம்பரப் பதாகைகளை அகற்றினர். கோயிலின் 4 வீதிகளிலும் விளம்பரத் தட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், விதியை மீறி பதாகைகள் வைக்திருந்ததாக 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியது: திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வணிக நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், அப்பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிக்கும் வகையில் விளம்பரப் பதாகைகளை கொண்டு வந்து வைப்பதும் வழக்கமாகியுள்ளது.  இதுகுறித்து முறையான அறிவிப்பு செய்தும், யாரும் பதாகைகளை அகற்ற முன்வரவில்லை. இதனால், காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை, சாலையோரங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்கக் கூடாது. இதுபோல் மீறி வைத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com