சுடச்சுட

  

  மாங்கனித் திருவிழா: மாப்பிள்ளை அழைப்புடன் இன்று தொடங்குகிறது

  By DIN  |   Published on : 13th July 2019 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் மாங்கனித் திருவிழா, மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை (ஜூலை 13) தொடங்குகிறது. 5 நாள்கள் முக்கிய நிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் செய்துள்ளன.
  காரைக்கால்  கைலாசநாதர் கோயில் சார்பில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரை மையப்படுத்தி மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
  ஆதியும் அந்தமும் இல்லா பரம்பொருளான சிவபெருமான்,  அம்மையே என்ற அழைத்த பெருமை காரைக்கால் அம்மையாருக்கு உண்டு.  அம்மையாரின் இளமைக் காலம் முதல் பரமதத்தருடன் நடைபெற்ற திருமணம், சிவபக்தரான அம்மையாரை சோதிக்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடலாக  சிவனடியார் கோலத்தில் அமுதுண்ணச் செல்லுதல்,  இறைவனுக்கு ஒப்பானவர் தமது மனைவி என எண்ணிய பரமதத்தர் பாண்டிய நாடு புறப்பட்டுச் செல்லுதல், பாண்டிய நாடு என்று குறிப்பிடப்படும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 2-ஆவது திருமணம் நடத்தல், 2-ஆவது மனைவி, குழந்தையுடன் அம்மையாரின் காலில் பரமதத்தர் வீழ்ந்து வணங்குதல், கணவரே தமது காலில் வீழ்ந்து வணங்கியதை பொறுக்காமல் அம்மையார், தமது அழகு மேனியை அழித்து, பேய் உருவம் வேண்டிப் பெற்று கைலாயத்தை அடைந்தவதை விளக்கும் வகையில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
  முதல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை  நடைபெறுகிறது. தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்திற்காக பரமதத்தர், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து இரவு 7.30 மணியளவில்  ஊர்வலமாக அம்மையார் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை  காலை புனிதவதியார் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 10 மணியளவில் புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
  அதே நாளில் மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்று புறப்பாடு கைலாசநாதர் கோயிலில் நடக்கிறது. இரவு  புனிதவதியாரும், பரமதத்தரும் முத்து சிவிகையில் வீதியுலா நடைபெறுகிறது.
  பிச்சாண்டவர் அபிஷேகம்  : திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் கைலாசநாதர் கோயிலில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை  பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் அம்மையார் கோயிலுக்கு அமுதுண்பதற்காக எழுந்தருளும் வகையில் வீதியுலா நடைபெறுகிறது. அப்போது மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி வீதிகளில் நடக்கிறது. இரவு அம்மையார் கோயிலில் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
  இரவு 9 மணியளவில் பரமத்தர் பாண்டியநாடு செல்லும் விதமான நிகழ்வாக கப்பல் வாகனத்தில் சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்றடைகிறார்.  இரவு 11 மணிக்கு இக்கோயிலில் பரமதத்தருக்கு 2-ஆவது திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதே நேரத்தில் அம்மையார் கோயிலில் இருந்து அம்மையார், புஷ்ப சிவிகையில் சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.  17-ஆம் தேதி புதன்கிழமை  அதிகாலை 4 மணிக்கு சிவ தரிசனப் பயனைத் தந்தருளும் வகையில் பஞ்சமூர்த்திகளும், கைலாச வாகனத்தில் எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அருகே நடத்தப்பட்டு, தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.
  இந்த நிகழ்ச்சிகளோடு முக்கியமான நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாப்பிள்ளை அழைப்பு முதல் திருக்கல்யாணம், அமுது படையல், வெள்ளைச்சாற்று, பவழக்கால் சப்பரம் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர். திருவிழாவையொட்டி பாரதியார் சாலையில் அம்மையார் கோயில் அருகே பந்தல் அமைக்கப்பட்டு, இருபுறமும் திருவிழாக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்மையார் மணி மண்டபத்தில் திருவிழா காலம் முதல் விடையாற்றி வரை கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  கோயில் மற்றும் பிற பகுதிகளில் பக்தர்களைக் கண்காணிக்கும் வகையில் கோயில், வீதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சப்பரம் வீதியுலா நடைபெறும் பகுதிகளில் பல  இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்குத் தேவையான வகையில் அன்னதானம், குடிநீர், நீர்மோர் வழங்கவும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.
  காரைக்கால் மாவட்ட காவல்துறையினர், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், உடைமைகள் பாதுகாப்புக் கருதியும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சீருடைக் காவலர்கள், சீருடையில்லா காவலர்கள் என பல நிலைகளில் கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai