தபால் நிலையத்தின் சேவைகளில் குறைபாடு:  மக்கள் அவதி

காரைக்கால் தலத்தெரு தபால் நிலையத்தில் கடந்த சில நாள்களாக கணினி, ஆதார் பதிவு சாதனம்

காரைக்கால் தலத்தெரு தபால் நிலையத்தில் கடந்த சில நாள்களாக கணினி, ஆதார் பதிவு சாதனம் பழுது போன்றவற்றால், சேவைகள் முடங்கியுள்ளன. எனவே, இப்பகுதி மக்கள் தபால் சேவைக்காக தொலைதூரத்தில் உள்ள தலைமைத் தபால் நிலையத்துக்கு செல்ல நேரிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
 காரைக்கால் மாவட்டத்தில், நகரப் பகுதியில் தலைமைத் தபால் நிலையமும் தலத்தெரு, திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட பிற இடங்களில் தபால் நிலையங்களும், கிராமப்புறங்களில் தபால் நிலைய  சேவை மையங்களும் இயங்குகின்றன.
தலைமைத் தபால் நிலையத்தில் தற்போது பாஸ்போர்ட் சேவை கேந்திரா என்ற சிறப்புப் பிரிவும்,  வங்கி சேவையும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிற தபால் நிலையங்களிலும் தபால் துறையின் சேமிப்பு உள்ளிட்ட பிற சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தபால் நிலையங்களை மக்கள் பெருமளவு நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அனைத்து தபால் நிலையங்களும், சேவை மையங்களிலும் மக்களுக்கான சேவையில் விரைவு நிலை இருக்க வேண்டிய சூழலில், சில நிலையங்கள் குறிப்பாக நிரவி பகுதி நிலையம் உள்ளிட்டவற்றில் தபால் பட்டுவாடாவில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக புகார் கூறப்படுகிறது. நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகள் தொலைதூரத்தில் இருந்தால், தபால் சென்றடைவதில் சிக்கல் உள்ளது. பொதுமக்கள் பலரும் தபால் நிலையத்தின் தபால் பட்டுவாடா சேவையில் திருப்தியடைய முடியாமல் உள்ளதாக பரவலான புகார் உள்ளது.
காரைக்கால் பகுதி தலத்தெரு தபால் நிலையம் என்பது முக்கியமான நிலையமாக உள்ளது. இந்த பகுதியில் அண்ணா அரசு கலைக் கல்லூரி, புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம், வட்டார வளர்ச்சித்துறை, வேளாண் துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இவர்கள் பெரும்பான்மையினர் தலத்தெரு தபால் நிலையத்தின் சேவையைப் பெற நாடுகின்றனர்.
ஆனால் இந்த நிலையத்தின் சேவையில் குறைபாடு ஏற்பட்டுவருவதாக அந்த பகுதியினர் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட குடிமக்கள் நலச் சங்கத் தலைவர் வி.ஆர்.தனசீலன் வெள்ளிக்கிழமை கூறியது :
இந்த நிலையத்தை பெருவாரியான மக்கள் பயன்படுத்துகின்றனர். நிலையத்தை மூடும் நிலைக்கு தபால் துறை முடிவெடுத்தபோது போராடி இதனை மக்களுக்காக நிலை நிறுத்தினோம். காரைக்கால் மாவட்ட தபால் துறை நிர்வாகம் அதிக வருவாயை ஈட்டுவதாக உள்ளது. இது நாகை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டத்திலே அதிக வருவாயை தரக்கூடியதாக இருந்தும், காரைக்கால் தபால் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை.
குறிப்பாக காரைக்கால் தபால் நிலையத்தில் விரைவு தபால் பதிவு செய்யும் நேரம் இரவு 8 மணி வரை இருந்தது மாலை 6 மணியாக குறைக்கப்பட்டுவிட்டது. தலத்தெரு தபால் நிலையத்தில் ஆதார் சேவைக்கான சாதனங்கள் பழுதானதை சீர்படுத்தவில்லை. கடந்த சில நாள்களாக கணினி பழுதாகிவிட்டதை சீர்படுத்தாததால், பதிவுத் தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்ய முடியாமல் காரைக்கால் நகர நிலையத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. காரைக்கால் தபால் நிலையங்கள் அனைத்திலும் உள்ள கணினிகள் மிகவும் பழைமையானவை. புதிதாக நிறுவுதற்கு நடவடிக்கை எடுக்கப்பதில்லை. காரைக்கால் தபால் நிர்வாகம் தனித்தன்மையோடு செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com