துணைநிலை ஆளுநரின் மனு தள்ளுபடி: காங்கிரஸ் கருத்து

துணை நிலை ஆளுநரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 

துணை நிலை ஆளுநரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 
இதுதொடர்பாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.வி.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுதில்லியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண் பேடியை அம்மாநில மக்கள் தோல்வியடையச் செய்தனர். இவருக்கு ஏதாவது பதவி தரவேண்டுமென பாஜக அரசு நினைத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமித்தது. ஆளுநர் பதவி ஏற்றது முதல் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் இடையூறுகளை கொடுக்கத் தொடங்கினார்.
புதுச்சேரியின் மக்கள் பிரதிநிதிகளும், திறம்பட பணியாற்றக்கூடிய, அனுபவசாலிகள் அமைச்சர்களாக இருந்தும், சிறப்பாக செயல்பட முடியாத வகையில் முட்டுக்கட்டைகளை துணை நிலை ஆளுநர் போட்டுவந்தார். ஆட்சியாளர்களும், மக்களும் இதனால் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை.
முக்கியமாக இலவச அரிசி வழங்கலிலும் கடும் இடையூறுகளை துணை நிலை ஆளுநர் ஏற்படுத்தினார். புதுச்சேரி மாநில மக்களை பல்வேறு நிலைகளில் சிரமத்தை சந்திக்க வைத்த அவர், தமிழக மக்களையும் தண்ணீர் விவகாரத்தில் கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இவ்வாறெல்லாம் மக்களை துச்சமென நினைத்து வந்த அவரது போக்குக்கு, சரியான முறையில் உச்சநீதிமன்றம் தீர்வை ஏற்படுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை, ஜனநாயகம் நிச்சயம் வெற்றிபெறும் என்பதை நிரூபித்துள்ளது என்றார் ஏ.வி.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com