மாணவர்கள் இடம் மாற்றப்பட்ட பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

ஆசிரியர் பற்றாக்குறை, இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மாணவ, மாணவிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பள்ளியை அமைச்சர்  ஆர். கமலக்கண்ணன்  ஆய்வு செய்தார்.


ஆசிரியர் பற்றாக்குறை, இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மாணவ, மாணவிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பள்ளியை அமைச்சர்  ஆர். கமலக்கண்ணன்  ஆய்வு செய்தார்.
காரைக்கால் அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பு மாணவியரை, வடமறைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இணைப்புப் பள்ளியாக ஏற்படுத்தி மாற்றம் செய்யப்பட்டது. தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பு மாணவர்களை, கோயில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கண்ட பள்ளியில் இணைப்பு ஏற்படுத்தி மாற்றம் செய்யப்பட்டது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகவும் ஆசிரியர் பற்றாக்குறையும், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகமாகவும், மாணவர்கள் குறைவாகவும் உள்ளதால், மாணவர்கள் இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கல்வித்துறை எடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமல்படுத்தியது.
வடமறைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளி இணைப்புப் பிரிவில் பயிலும் மாணவிகள் சிலரின் பெற்றோர், காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை சந்தித்து, பள்ளியில் கழிப்பறைகளில் கதவுகள் முறையாக இல்லை என புகார் தெரிவித்தனர்.  இதையொட்டி புகார் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கு அமைச்சர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று
பார்வையிட்டார்.
கழிப்பறைக் கதவுகள் முறையாக இல்லாததும், தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்த அமைச்சர், இதனை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் இணைப்புப் பிரிவில் பயிலும் மாணவிகளிடம் குறைகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து கோயில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி இணைப்புப் பிரிவுக்கும் சென்று பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். 
கல்வித்துறை துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன், முதன்மைக் கல்வித் அதிகாரி அ.அல்லி, வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படி வசதிகளில் எந்த குறையும் இல்லாத வகையில் கல்வித்துறையினர் அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிலையில், கல்வித்துறையினர் சனிக்கிழமை கூறும்போது, வடமறைக்காடு பள்ளியில் கழிப்பறைகளில் 3 கதவுகள் புதிதாக மாற்றப்பட்டுவிட்டது என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com