பிரெஞ்சு குடியரசு தின விழா: உலகப் போர் நினைவுத் தூணுக்கு மரியாதை
By DIN | Published On : 15th July 2019 02:00 AM | Last Updated : 15th July 2019 02:00 AM | அ+அ அ- |

பிரான்ஸ் நாட்டின் 230-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பிரெஞ்சு 230-ஆவது குடியரசு தின விழா காரைக்காலில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உலகப்போர் நினைவுத்தூண், போர் வீரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. காரைக்காலுக்கு வரும் சுற்றுலாவினர், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருவோர் இந்த பகுதிக்குச் சென்று மரியாதை செய்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
காரைக்காலில் உள்ள ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியையொட்டி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பிரெஞ்சுக் குடியுரிமைதாரர்கள் ஆகியோர் நினைவுத் தூண் அருகே திரண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி கலந்துகொண்டார். புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி இசபெல் நினைவுத் தூண் மற்றும் போர்வீரர் சிலைக்கு மரியாதை செய்தார். பிரெஞ்சு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து கொடி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, நினைவுத் தூண் அமைத்திருக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட இரு கம்பங்களில் இந்திய தேசியக் கொடியும், பிரெஞ்சு தேசியக் கொடியும் ஒரே நேரத்தில் ஏற்றிவைத்து, இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.