காரைக்கால் பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகைப் பணி
By DIN | Published On : 19th July 2019 12:37 AM | Last Updated : 19th July 2019 12:37 AM | அ+அ அ- |

காரைக்காலில் சாகர் கவாச் என்ற கடலோரப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் ஒத்திகைப் பணியை போலீஸார் தொடங்கியுள்ளனர். முதல் நாளில் காரைக்காலுக்குள் தீவிரவாதிபோல நுழைய முயன்ற இருவரை போலீஸார் பிடித்தனர்.
ஆபரேஷன் ஆம்லா எனும் தீவிரவாத தடுப்பு ஒத்திகை கடலோர பிராந்தியங்களில் ஆண்டுக்கு இரு முறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இது நடத்தப்படுகிறது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு இந்த ஒத்திகை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. கடல் வழியாக கப்பலில் சிலரை கரையில் இறக்கிவிடுவதும், இவர்கள் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதிகள் போல் நுழைந்துகொள்வதும், உள்ளூர் போலீஸார் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர், எவ்வளவு நேரத்தில் மேற்கொள்கின்றனர், மக்களை காப்பாற்றக்கூடிய வகையில் போலீஸாரின் பணிகள் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதேபோன்று சாகர் கவாச் (கடல் கவசம்) எனும் பெயரில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையும் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்த ஒத்திகை வியாழக்கிழமை காலை 6 முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை எனும் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி கடலோர காவல் நிலையத்தார் மற்றும் அனைத்து காவல் நிலைய அலுவலர்கள், காவலர்கள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் காரைக்கால் பிராந்தியத்தில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளத் தொடங்கினர். முன்னதாக கடலோர காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களை அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அறிமுகமில்லாதவர்கள் நடமாட்டம் இருக்கும்பட்சத்தில் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஒத்திகை தொடங்கிய நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸார் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்திறங்கிய இருவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். வந்தவர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் போலீஸாரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வந்த, திட்டமிட்டு அனுப்பப்பட்ட குழுவினர் என்பது தெரியவந்தது. இவர்களை கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர்,அனுப்பி வைத்தனர்.
மீன்பிடித் துறைமுகத்துக்கு வரும் விசைப்படகுகளில் சோதனை செய்து, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள்தான் படகில் வந்துள்ளார்களா என விசாரணை நடத்தி உறுதிச் செய்தனர். மேலும் வாஞ்சூர் மற்றும் பூவம், அம்பகரத்தூர் எல்லைப்புறத்தில் வரும் பெரும்பாலான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதும், வாகனங்களில் வருவோரிடம் விசாரணை செய்வதையும் தொடர்ந்துள்ளனர்.
திருநள்ளாறு கோயிலில் தீவிர சோதனை: திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் வழக்கமாக பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. ஒத்திகையையொட்டி கூடுதலான போலீஸார், கோயில் பிரதான வாயிலில் இருந்து கோயிலுக்குள் நுழைவோரை சோதித்தும், விசாரணை நடத்தியும் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியது: வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை கடல் கவசம் கண்காணிப்பு ஒத்திகை தீவிரமாக இருக்கும். மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள கப்பல் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், ஓ.என்.ஜி.சி., பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், திருநள்ளாறு கோயில், காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.