காரைக்காலில் குளங்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

காரைக்கால் ஆட்சியரகம் சார்பிலும், திருப்பட்டினத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலும் குளங்கள் தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. 


காரைக்கால் ஆட்சியரகம் சார்பிலும், திருப்பட்டினத்தில் கோயில் நிர்வாகம் சார்பிலும் குளங்கள் தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. 
காரைக்கால் மாவட்டத்தில் கோயில்கள் சார்பில் அந்த பகுதிகளைச் சேர்ந்த குளங்களை தூர்வாரி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், மாவட்டத்தில் ஒவ்வொரு அரசுத் துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து குளங்களை தத்தெடுத்து தூர்வாரி  சுற்றிலும் மரக்கன்றுகள் நடவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பணிகள் ஆங்காங்கே தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பட்டினம் ஜடாயுபுரீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான ஐயன் குளம் தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன், ஜடாயுபுரீசுவரர் கோயில் தனி அதிகாரி வீரச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் குளத்தை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தப்படும் எனவும், குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்படும்,. குளத்துக்கு தண்ணீர் வரும் வழி, வெளியேறும் வழியை முறைப்படுத்தும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகம் சார்பில் பணி: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றுவோர் சொந்த நிதியில் கீழகாசாக்குடியில் வாத்துக்குளத்தை தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ்  தொடங்கி வைத்து, ஒவ்வொரு துறைகளும் ஒவ்வொரு குளத்தை தூர்வாரவும், குளக்கரையில் மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை செய்யும்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும். அந்தந்த பகுதி குளத்தை சுற்றுவட்டாரத்தில் உள்ளோர் பாதுகாக்க வேண்டும். கழிவுகளை கலக்கச் செய்யாமலும், தண்ணீரை சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றார்.
காரைக்கால் தீயணைப்பு வீரர்களும், ஆட்சியரக ஊழியர்களும் குளம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com