வட்டார வளர்ச்சி அலுவலக செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டு: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

புதுச்சேரி மாநில வட்டார வளர்ச்சி அலுவலக செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது என்று, வேளாண்மை துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்தார். 


புதுச்சேரி மாநில வட்டார வளர்ச்சி அலுவலக செயல்பாடுகளுக்கு மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது என்று, வேளாண்மை துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்தார். 
புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும்  மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: 
வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் மத்திய அரசு, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும்  மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் திறமைக்கான முழு வடிவம் பெறவேண்டும், அதன் தொழிநுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும், பயிற்சிகளைப் பெறவேண்டும் என்ற காரணத்தால்தான் வங்கியாளர்கள், கூட்டுறவு அமைப்பினர் என பல்வேறு தரப்பினரை அழைத்து திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்படுகிறது.
நாட்டின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்றார் மகாத்மாகாந்தி. எல்லோருக்குமான வளர்ச்சிதான் காந்தியின் தத்துவம். கிராமம் முன்னேறவேண்டும், கிராமத்தினர் முன்னேறவேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் புரிந்துகொண்டு, அதை செயல்படுத்த முன்வரும்போது வெற்றி சாத்தியமாகிறது.
ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தும்போது, அது யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அவர்கள் பயனடைந்தால்தான் திட்டம் வெற்றிபெறும். பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான புரிதல் ஏற்படவும், பயிற்சி பெறவும், பயிற்சியின் மூலம் அதற்கான தொழில்களை செய்யவேண்டும் என்பதுதான் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளாகும். சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை தரும். விவசாயம் தொடர்பில்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை. புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் தனியார் பால் பண்ணைக்கு சென்றிருந்தபோது, பால் கறந்து விற்பனை செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தயிர், மோர் தயாரித்தல், மோரில் இஞ்சி, கொத்தமல்லி போன்றவையை சேர்த்து மதிப்புக் கூட்டப்பட்டு பேக் செய்து உணவுப் பொருளாக விற்பனை செய்கிறார்கள். விசாரணை செய்தபோது, பால் மட்டும் விற்பனை செய்வதைக்காட்டிலும் மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்யும்போது நல்ல லாபம் கிடைக்கிறது, மக்களிடையே வரவேற்பு இருப்பதை தெரிவித்தனர். இதுபோல விபூதி தயாரிப்பிலும் ஈடுபடலாம். இதற்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எந்த தொழிலும் தொடங்கும்போது சிரமமாகவும், லாபம் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் சில ஆண்டுகளில் தொழிலதிபராக்கிவிடும் அந்த தொழில். நுகர்வோரின் கலாசாரம் மாறும்போது, அதற்கேற்ப நமது உற்பத்திகளை மேம்படுத்தி லாபமீட்டவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும் முறையாக செயல்படுத்துகிறோம். இதனால் மத்திய அரசு புதுச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக செயல்பாடுகளை பாராட்டியுள்ளது. எனவே எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உயரிய நோக்கோடு, நல்ல புரிதலோடு, பயிற்சிகள் பெற்று சமுதாயத்துக்கு ஏற்றார்போல தொழில் தொடங்கி முன்னேற இதுபோன்ற கூட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர் ஆர். கமலக்கணணன். 
கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ், ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறை துறை திட்ட இயக்குநர் ஏ.எஸ்.ஏ. ரவிபிரசாத், திட்ட அலுவலர் டி. மோகன்குமார், திட்ட பயிற்சியாளர் லட்சுமணன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர்
எஸ். பிரேமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 15 குழுக்களுக்கு ரூ. 3 முதல் 9 லட்சம் வரை தொழில் தொடங்க 
கடனுதவி வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com