முடிவுக்கு வருகிறது கோலா மீன் "சீஸன்'

சுமார் 3 மாதங்கள் மட்டுமே சீசன் காலமாக ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக்கு வரும் கோலா மீன் தற்போது

சுமார் 3 மாதங்கள் மட்டுமே சீசன் காலமாக ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக்கு வரும் கோலா மீன் தற்போது சீஸன் நிறைவு காலத்தையொட்டி முடிவுக்கு வருகிறது. காரைக்காலில் கோலா மீன் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி  ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசன் இருப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக் காலம்  அமல்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு 100 சதவீதம் இருக்காது. 
இந்நிலையில், பருவ காலத்தின் கோலா மீன், மீன்பிடித் தடைக்காலத்திலேயே வரத்து ஏற்பட்டுவிடும். நிகழாண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து காரைக்காலுக்கு கோலா மீன் வரத்து ஏற்பட்டது. ஆடி மாத காற்று வீசும் காலம் தொடங்கும்போது, கோலா மீன் கடலில் மீனவர்களுக்கு சிக்குவதும் வெகவாக குறைந்துவிடுகிறது. இது நீண்ட காலமாக உள்ள
நிலையாகும்.
ஆடி மாதம் பிறந்துவிட்ட நிலையில் காரைக்காலுக்கு கோலா மீன் வரத்தும் குறைந்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய 50 சதவீதத்துக்கு மேல் வரத்து குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து மீனவர்கள் கூறியது: சுமார் 30 நாட்டிக்கல் மைல் தூரம் கடலுக்குள் சென்று, கூட்டமாக 2, 3 மீட்டர் தூரம் வரை பறக்கும் கோலா மீன்களை வலை வீசி பிடிக்கப்படும். கடந்த 2 மாதங்களாக மிகுதியாக வரத்து இருந்தது. இதனால் மீனவர்கள் ஆர்வமாக கோலா மீன் பிடிப்பதற்கென்றே சென்று வந்தனர். மீனவ கிராமங்களில் இருந்தும், துறைமுகம் அருகே அரசலாற்றங்கரையிலிருந்தும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த 10 நாள்களாக கோலா மீன் பிடிக்கச் செல்வோருக்கு தேவையான அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் குறைந்த அளவே பிடித்துவருகின்றனர். இது சீசன் நிறைவுக்கு வருவதை உணர்த்துகிறது. அடுத்த சில நாள்களில் கோலா மீன் பிடிக்க பிரத்யோகமாக செல்வதை மீனவர்கள் தவிர்த்துவிடுவர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com