ரூ.10 கோடியில் 2 அடுக்கு மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணி: 2020 ஜனவரியில் நிறைவடையும் என தகவல்

காரைக்கால் நகரப் பகுதியில் பழைமையான குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக புதிய குழாய் பதிப்புப்

காரைக்கால் நகரப் பகுதியில் பழைமையான குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக புதிய குழாய் பதிப்புப் பணி நடைபெற்றுவரும் நிலையில், ரூ.10.25 கோடியில் 2 அடுக்கு மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. இந்த பணி 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் நகரப் பகுதியில் பூமிக்கடியில் குடிநீர் குழாய் பதிப்பு செய்யப்பட்டு ஏறக்குறைய 30 ஆண்டுகளாகிறது. இது, தற்போது சிதிலமடைந்து நீர்க் கசிவு ஏற்படுவதும், சாலையோரத்தில் செல்லும் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும் குடிநீர் விநியோகம் தடைப்படுவதாகவும் கூறப்பட்டது.  காரைக்கால் நகரப் பகுதியின் அனைத்து மண்டலத்திலும் புதிதாக குழாய் பதித்தால் மட்டுமே குடிநீர் விநியோகம் சீராகும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, காரைக்கால் மத்திய மண்டலமாக கொண்டிருக்கும் பகுதியில், குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு, ஹட்கோ கடன் ரூ.49. 45 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 
இந்த திட்டத்தில்,  ராஜாத்தி நகர் பகுதியில் 80 அடி உயரம் மற்றும் 60 அடி உயரத்தில் 2 அடுக்கு குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டுதல், மேலும் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி (சம்ப்) கட்டுமானமும் உள்ளது.
ஒவ்வொன்றும் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். அகலங்கண்ணு பகுதியிலிருந்து காரைக்கால் வரை 400 எம்எம் குழாய் புதிதாக பதிக்கப்பட்டு நகரத்துக்கு கொண்டுவந்து, அனைத்து சாலைகளின் பூமிக்கடியில் புதிய குடிநீர் குழாய் பதிப்பு செய்து, ஒவ்வொரு வீடுகளுக்கும் இணைப்பு தரும் வகையில் அமைப்பு உருவாக்கப்படுகிறது. கட்டப்படும்  60 அடி உயரம் கொண்ட மேல்நிலை தொட்டியிலிருந்து ராஜாத்தி நகர், பாரீஸ் நகர் உள்ளிட்ட நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் பயன்பெறும். 80 அடி உயர தொட்டி மூலம் காரைக்கால்மேடு, கடற்கரைப் பகுதி உள்ளிட்ட தூரமான குடியிருப்புப் பகுதிகள் பயன்பெறும். இதன் மூலம் நகரப் பகுதியில் 1.05 லட்சம் பேர் குடிநீரை தங்கு தடையன்றி பெறும் வாய்ப்பை பெறுவர்.  அகலங்கண்ணுவில் உள்ள 12 ஆழ்குழாய்  கிணறு மூலம் இந்த தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவது பொதுப்பணித் துறையின் திட்டமாகும். அகலங்கண்ணுவிலிருந்து பிரதானக் குழாய் பதிப்பும், ஒவ்வொரு வீதிகளிலும் பள்ளம்  தோண்டி குடிநீர் குழாய் பதிப்புப் பணிகள் தற்போது நடந்துவருகிறது. 2 அடுக்கு குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது : நகரப் பகுதியில் சாலைகளைத் தோண்டி குடிநீர் குழாய் பதிப்பு செய்யும் பணி 90 சதவீதம் நிறைவைடந்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பிரதான குழாய் பதிப்பு செய்ய வேண்டும். இப்பணிகள் படிப்படியாக நடைபெற்றுவருகிறது. குழாய் பதிக்கத் தோண்டிய சாலைகளை செப்பனிடும் பணிகளும் ஆங்காங்கே
நடந்துவருகிறது. இதுவொருபுறம் நடந்துவரும் நிலையில், ராஜாத்தி நகரில் 2 அடுக்கு குடிநீர்த் தேக்கத் தொட்டி, கீழ்நிலை தொட்டி கட்டுமானம் ரூ. 49.45 கோடி திட்டத்தில் உள்ளடக்கமாக ரூ.10.25 கோடியில் கட்டுமானம் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. 
தொலைநோக்குப் பார்வையில் இந்த குடிநீர் குழாய் பதிப்பும், குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானமும் நடைபெறுகிறது. தொட்டி கட்டுமானம் 2020 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்யும் இலக்கில் பணிகள் நடைபெறுகின்றன. இதே காலக்கட்டத்திற்குள் குடிநீர் குழாய் பதிப்பும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தயார்படுத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com