Enable Javscript for better performance
கிராம வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கிராம வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மாவட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
    கிராம வளர்ச்சித் திட்டம் தயாரிப்பது சம்பந்தமான 2 நாள் பயிற்சி முகாம் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் பயிற்சி மையத்தின் மூலம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், கிராமப் பஞ்சாயத்து நிலையிலான அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறையினருக்கான பயிற்சியாக இது நடைபெற்றது.
    பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா தொடங்கிவைத்தார். நிறைவு நாளிலும் ஆட்சியர் பங்கேற்று, அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்துப் பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனாவும் பயிற்சியில் கலந்துகொண்டு அதிகாரிகளிடையே பேசினார்.
    பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் 27 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. கிராம வளர்ச்சித் திட்டம் என்பதன் அடிப்படையில் திட்ட வரைவு தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முதல்கட்டப் பணிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான பயிற்சியாகவே 2 நாள்கள் இப்பயிற்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்குத் தரப்பட்டுள்ளது. 
    வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பி.எல்.எஃப். மற்றும் சுய உதவிக்குழுவினர் பங்கெடுப்பில் கிராமப்புறத்தில் வீடு வீடாக சென்று அவர்களது வாழ்க்கை நிலை, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், கிராமத்தினரின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்கிறார்கள். கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையானவை எவை என்பது இந்த விவர சேகரிப்பின் மூலம் தெரியவரும். மத்திய அரசு 2018-ஆம் ஆண்டு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
    கிராம சபைக் கூட்டங்களுக்குச் செல்லும் அதிகாரிகள், நாம் என்ன செய்யவுள்ளோம் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளவே இதுபோன்ற பயிற்சியாகும். அதிகாரிகளுக்கு திட்டங்கள் குறித்த நல்ல புரிதல் இருக்கவேண்டும். நகரத்துக்கு இணையாக சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடியும் வசதி, அரசுத் துறையினரின் சேவைகள் இருக்கவேண்டும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.
    இந்த 2 நாள் பயிற்சியின் மூலம் கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை தயாரிக்கும் வகையில் அதிகாரிகள் உரிய விவரங்களை தெரிந்திருக்கிறார்கள் என்றார் ஆட்சியர். முன்னதாக  துறை சார்ந்த நிபுணர்களான சி.கதிரேசன், ஏ.கே.பன்ஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai