Enable Javscript for better performance
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

    By DIN  |   Published on : 25th July 2019 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாதந்தோறும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் வியாழக்கிழமை (ஜூலை 25) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகம் (பி.ஆர்.டி.சி) ஊழியர் சங்க பொறுப்பாளர் ஜி. சுப்புராஜ் கூறியது:   பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இவை நிறைவேற்றப்பாடமல் காலம் கடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக மாதந்தோறும் அதே மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்பது பிரதானக் கோரிக்கை. ஊழியர்களுக்கு காலத்துடன் ஊதியம் கிடைக்காததால் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டுசென்றுள்ளோம். ஆனாலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
    தவிர, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும், இந்த நிறுவனத்துக்கு நிரந்தர மேலாண் இயக்குநர் நியமனம், பொதுமேலாளர் ஆகியோரை நியமிக்கவேண்டும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இ.பி.எஃப்., எல்.ஐ.சி, கூட்டுறவு சங்க தொகைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டும், கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றுவரும் பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட பணிக் கொடையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக புதுச்சேரியில் புதன்கிழமை 24-ஆம் தேதியும், காரைக்கால் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஜூலை 25-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.  புதுச்சேரி அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஊழியர்களின் நலனை காக்கவும், நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai