Enable Javscript for better performance
மாநில அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட புதுச்சேரி அரசே காரணம்: காரைக்கால் போராட்டக்குழு குற்றச்சாட்ட- Dinamani

சுடச்சுட

    

    மாநில அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட புதுச்சேரி அரசே காரணம்: காரைக்கால் போராட்டக்குழு குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதற்கு புதுச்சேரி மாநில அரசின் அணுகுமுறையே காரணம் என காரைக்கால் போராட்டக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
     புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி  மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளார்.
    இதுகுறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளரும், மூத்த வழக்குரைஞருமான எஸ்.பி. செல்வசண்முகம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
    புதுச்சேரி அரசு முறையான திட்டமிடலுடன் மத்திய அரசை அணுகாத காரணத்தினாலேயே  மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து பொருளாதார, சட்ட வல்லுநர்கள், 4 பிராந்தியங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் அடங்கிய உயர்நிலை குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால்,  புதுச்சேரி அரசு இதை  செய்யவில்லை.
    சட்டப்பேரவையில் சில வரிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதில் எவ்வித பயனுமில்லை.
    மாநில அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததே தவிர அது புதுச்சேரி பிராந்தியத்துக்கு மட்டுமா அல்லது 4 பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பகுதிக்கானதா என்பதையும் தெளிவாக சொல்லவில்லை. ஏனெனில், மாநில அந்தஸ்து பெற வேண்டுமெனில் சட்டப்படி ஒரே நிலப்பரப்பாக இருக்க வேண்டும்.
    ஒரே நிலப்பரப்பாக இல்லாத கோவா, டையூ, டாமன் எவ்வாறு கோவா மாநிலமாகவும் மற்றவை யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டதோ அதே நிலைதான் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்தியங்களுக்கும் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்து செயல்படவேண்டியுள்ளது.
     அதனால், மாநில அரசு உடனடியாக ஒரு உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும். அதன் மூலம் இது தொடர்பான விஷயங்களை விரிவாக ஆய்ந்து தெளிவான ஒரு வரைவை உருவாக்கி  அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பிரதமரை அனைத்துத் தரப்பினரும் சந்தித்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும்போது அது சாத்தியமாக வாய்ப்புள்ளது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai