Enable Javscript for better performance
யானைக்கால் நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் நுண் பரிசோதனை முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
    புதுச்சேரி அரசின் நலவழித்துறையின் மூலம், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டலில் காரைக்கால் மாவட்டத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் நுண் பரிசோதனை முகாமை நலவழித்துறை நிர்வாகம் தொடங்கியது. காரைக்கால் நேரு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இம்முகாமை மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ் தொடங்கிவைத்தார்.
    அவர் பேசும்போது, காரைக்கால் மாவட்டத்தில் 44 பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் சுமார் 1,600 பேருக்கு 3-ஆம் கட்ட யானைக்கால் நோய் கண்டறியும் நுண் பரிசோதனை முகாமாக இது நடைபெறுகிறது. இந்த பரிசோதனையில் 17 மருத்துவக் குழுவினர்கள் கலந்துகொண்டு 2 நாட்கள் பரிசோதனை செய்யவுள்ளனர்.
    இந்த பரிசோதனையின் அடிப்படையில் யானைக்கால் நோய் கண்டறியப்பட்டால், அவர்களது வீட்டிற்கே சென்று இலவச மருத்துவச் சிகிச்சை தரப்படும் என்றார் அவர்.
    முகாமில் புதுச்சேரியிலிருந்து பூச்சி மற்றும் கொசுக்களால் பரவும் நோய் தடுப்புத் திட்ட அதிகாரி மருத்துவர் சுந்தர்ராஜன், தலைமை  மருத்துவ அதிகாரி அன்புச்செல்வி, உதவி பூச்சியியல் அலுவலர்கள் குணசேகரன், ரங்கநாயகி மற்றும் மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேகர், புள்ளியல் துறை அதிகாரி அன்பழகன், சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    முகாம் ஏற்பாடுகளை யானைக்கால் நோய் ஆய்வாளர்கள் ஜெயிக்கின் ஜெயபிரதா, யோகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai