முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
மின்தடையைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மதிமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 30th July 2019 07:03 AM | Last Updated : 30th July 2019 07:03 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் நிலவி வரும் தொடர் மின்தடையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் துணை மின் நிலையத்தில் ரூ. 50 கோடி திட்ட மதிப்பில், நெய்வேலியிலிருந்து நேரடியாக மின்சாரம் பெற்று விநியோகிக்கும் திட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. காரைக்காலின் பெரும்பாலான பகுதிக்கு இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்பட்டினம் பகுதியில் உள்ள பி.பி.சி.எல். எனும் புதுச்சேரி மின்திறல் குழும நிர்வாகம், வாஞ்சூர் முதல் திருப்பட்டினம், நிரவி பகுதிகளை உள்ளடக்கி காரைக்காலின் அரசலாறு பாலம் வரை மின் விநியோகம் செய்கிறது. திருப்பட்டினம், நிரவியில் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாவட்ட அமைப்பாளருமான எம்.ஏ. நிசார் கூறியது: பிள்ளைத்தெருவாசல் துணை மின்நிலையம் ரூ. 50 கோடியில் மேம்படுத்தப்பட்டும் காரைக்கால் நகரப் பகுதியில் மின்தடை தொடர்கிறது.
நெய்வேலியிலிருந்து நேரடியாக மின்சாரத்தை ஈர்த்து வழங்கும் போது, அதற்கான திறனில் காரைக்கால் பகுதியில் மின்மாற்றிகள், மின்கம்பிகள் இல்லாததால் தொடர்ந்து பழுது ஏற்பட்டு, நகரப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பி.பி.சி.எல். உற்பத்தி செய்யும் மின்சாரம் மூலம் பயனடையும் வாஞ்சூர் முதல் நிரவி, திருப்பட்டினம், அரசலாறு பாலம் வரையிலான பகுதியில் எப்போது பிரச்னை இருக்காது. ஆனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியிலும் தொடர் மின்தடை விட்டுவிட்டு ஏற்படுகிறது.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நிரவி பகுதி மக்களாகும். இதுகுறித்து நிரவி மின்துறையிடம் கூறினால் திருப்பட்டினத்தில் பிரச்னை எனவும், பார்த்து வருவாதாகவும் கூறுகின்றனர். நாளொன்றுக்கு 7, 8 முறை தடை ஏற்படுகிறது. திருப்பட்டினத்திலும், நிரவியிலும் 2 இளநிலை பொறியாளர் அலுவலகம் இயங்குகிறது. இரு அலுவலகத்திலும் உள்ளூர் பொறியாளர்களே பணியாற்றுகின்றனர். இருந்தும் உள்ளூர் பகுதியை மேம்படுத்தவோ, பிரச்னைகளை களையவோ அவர்கள் உரிய கவனம் செலுத்துவதில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல உள்ளன. மாணவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரே புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவராக உள்ளார். இப் பிரச்னைகள் குறித்து மின்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி, தேவையான சாதனங்களை புதுச்சேரி அரசிடமிருந்து பெற்றுத்தரவோ, உரிய ஆலோசனை வழங்கவோ செய்திருக்கவேண்டும். ஆனால், அவரும் மின்சாரப் பிரச்னை குறித்து சிறந்தும் கவனம் செலுத்துவதில்லை. ஒட்டுமொத்தத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கிறார்கள் என்றார் அவர்.