அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்த வலியுறுத்தல்

அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராம மீனவப் பஞ்சாயத்தார் புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :
கடல் அரிப்பிலிருந்து கடலோர கிராமங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்க கடலோரத்தில் தடுப்புச் சுவர் முக்கியத்துவம் பெறுகிறது.  திட்ட அமலாக்க முகமை மூலம் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. எனவே கிராமம் முழுமையான பாதுகாப்புடன் இருக்க எஞ்சிய பகுதியிலும் தடுப்புச் சுவரைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.காரைக்கால் அரசலாறு முகத்துவாரம் வழியே கடலுக்கு விசைப்படகுகள் சென்றுவிட்டு துறைமுகம் திரும்புகிறது. முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் சேர்ந்து படகுகள் எளிதாக சென்று திரும்ப முடியாத நிலை கடந்த சில மாதங்களாக உள்ளது. தற்போது மீன்பிடி தடைக் காலமாக இருப்பதால் படகு போக்குவத்து நடைபெறவில்லை. இந்தத் தருணத்தில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த புதுச்சேரி அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து மீனவ கிராமங்களின் சாலைகளும் பள்ளம் படுகுழிகளாக சிதிலமடைந்து மிக மோசமாக இருக்கின்றன. இந்த சாலைகளை முழுமையாக புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி கடலுக்குச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு உரிய நிர்பந்தம் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com