கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st June 2019 09:57 AM | Last Updated : 01st June 2019 09:57 AM | அ+அ அ- |

காரைக்காலில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ மாம்பழங்களைப் பறிமுதல் செய்தனர்.
பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் ஜூலை மாத மத்தியில், மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், மாம்பழ விற்பனை இந்த பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும். எனவே காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி முகாமிட்டு தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கடந்த 2 நாள்களாக காரைக்காலில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வந்தார். 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பழக்கடைகளில் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட குழுவினருடன் சென்று சோதனையில் ஈடுபட்டார். ஒரு கடையில் 550 கிலோ கார்பைடு கல் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்களையும், சில சிறிய கடைகளில் 50 கிலோவும் என மொத்தம் 600 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது : காரைக்காலில் ஒரு நாளில் நடத்திய சோதனையில் குறிப்பாக காரைக்கால் நகரப் பகுதியில் ராஜேந்திரன் பழக்கடையில் 550 கிலோ மாம்பழங்கள் கார்பைடு மூலம் பழுக்கவைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பழங்கள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து சட்டத்தின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும் சிறிய வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனை காரைக்காலில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது என்றார்.