பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் முளைப்புக்காக விதைப்பு: 2020-இல் கன்றுகளாக வழங்கத் திட்டம்
By DIN | Published On : 09th June 2019 12:39 AM | Last Updated : 09th June 2019 12:39 AM | அ+அ அ- |

காரைக்காலில் கார்ஃபைடு கல் மூலம் செயற்கையாக பழுக்கவைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அவற்றை பறவைப்பேட் பகுதியில் முளைப்புக்காக விதைத்துள்ளனர். இவைகள் முளைத்ததும், அடுத்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பொதுமக்களுக்கு கன்றுகளாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பான்மையான பழக்கடைகளில் விற்பனையாகும் பழங்கள் யாவும் கால்சியம் கார்ஃபைடு கல் மூலமாகவும், ரசாயன ஸ்பிரே மூலமும் பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை முற்றிலும் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வியாபாரிகள் யாரும் இதை பொருட்படுத்தாமல் காய்களை செயற்கையாக பழுக்கவைத்து விற்பனை செய்கின்றனர். காரைக்காலில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் செயல்படாததால், புதுச்சேரியிலிருந்து ஆண்டுக்கு ஓரிரு நாள் அதிகாரி வந்து கண்துடைப்பாக ஆய்வு செய்வதும், எச்சரிக்கை விடுப்பதுமாக நீண்ட ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்நிலையில், புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கடந்த வாரம் 3 நாள் காரைக்காலில் முகாமிட்டு, பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட குழுவினருடன் நடத்திய ஆய்வில், காரைக்காலில் மட்டும் ஒரே நாளில் 600 கிலோ மாம்பழங்கள் கால்சியம் கார்ஃபைடு மூலம் பழுக்கவைக்கப்பட்டதை அறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
விற்பனை செய்தோர் மீது துறை ரீதியிலான அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை எவ்வித பயன்பாடுமின்றி அழிப்பதைக் காட்டிலும், மாங்கன்றுகளாக முளைக்கச் செய்து, மக்களுக்கு வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இவற்றை பறவைப்பேட் நிலப் பகுதியில் பாத்திக் கட்டி வெள்ளிக்கிழமை விதைத்தனர்.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் கூறும்போது, உலக சுற்றுச்சூழல் தின தொடர் நிகழ்வாகவும், இயற்கை சார்ந்த ஒரு மாற்று யோசனையாகவும் கடைகளில் கைப்பற்றப்பட்ட மாம்பழங்களை பறவைப்பேட்டில் உள்ள காரை நகராட்சியின் வளம் மீட்புப் பூங்காவில் மணல் பாத்திகளில் முளைக்கச் செய்யும் நோக்கில் விதைக்கப்பட்டுள்ளது.
இவை முளைத்து கன்றுகளாக வரும்போது, ஓராண்டு காலம் பராமரிக்கப்பட்டு 2020 -ஆம் ஆண்டு ஜூன் 5 -ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மக்களுக்கு வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது' என்றார்.