பதவி உயர்வு பெற்ற மின்துறை கண்காணிப்பு பொறியாளருடன் ஊழியர்கள் சந்திப்பு
By DIN | Published On : 14th June 2019 07:42 AM | Last Updated : 14th June 2019 07:42 AM | அ+அ அ- |

பதவி உயர்வு பெற்ற மின்துறை கண்காணிப்புப் பொறியாளரை ஊழியர் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதுச்சேரி மின்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் (நிலை -2) வகித்த முரளி, காரைக்காலில் கடந்த ஆண்டு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியிலிருந்து உரிய மின் சாதனங்களை கொண்டுவந்து, புயல் வீசிய பின் ஒரு வார காலம் காரைக்காலில் தங்கி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டவர். மின்துறையினர், பொதுமக்கள் பலரும் அவரது செயலைப் பாராட்டினர்.
இவருக்கு புதுச்சேரி அரசு கண்காணிப்புப் பொறியாளர் நிலை 2-லிருந்து நிலை -1 ஆக பதவி உயர்வு அளித்தது. இப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து, அவரை காரைக்கால் மின்துறை தொழிலாளர் சங்கத்தினர் பழனிவேலு தலைமையில் புதுச்சேரிக்கு புதன்கிழமை சென்று சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து பழனிவேலு கூறியது: பதவி உயர்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளருக்கு வாழ்த்துத் தெரிவிக்க புதுச்சேரி சென்றிருந்தோம். அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு, ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும், காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தவேண்டியும், கடந்த 2 ஆண்டுகளாக விடுபட்டிருக்கும் கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டோம். மேலும், காரைக்காலில் மின்துறையில் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் தெரிவித்தோம். இவற்றின் மீது படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார்.