நிலுவை நிதியை வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

நிலுவையில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை புதுச்சேரி அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிலுவையில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை புதுச்சேரி அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுவோருக்கு, தொகுதி மேம்பாட்டு நிதி முறையாக வழங்கப்படாமல் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன்,  சட்டப் பேரவைத் தொடரில் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கிவரும்  தொகுதி மேம்பாட்டு நிதியை  உயர்த்தி கூடுதலாக ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக பலமுறை முதல்வர் உள்ளிட்டோரும் பேசியும் எந்தவித முன்னேற்றமுமில்லை. அறிவிப்பாக மட்டுமே இதுவரை நீடிக்கிறது.  கடந்த 2016 - 2017- ஆம் ஆண்டுக்கான  சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.1 கோடி முழுமையாக வழங்கப்பட்டது. அத்தொகையை வைத்து  ஒரு சில  வளர்ச்சித் திட்ட பணிகள் தொகுதியில்  மேற்கொள்ளப்பட்டன.  2017-2018- ஆம் ஆண்டுக்கான தொகை முழுமையாக வழங்கப்படாமல் சொற்ப நிதியாக  ரூ.36 லட்சம்  மட்டும் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை நிலுவையிலேயே உள்ளது. இதனால், தொகுதி வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டு, ஒருசில பணிகள் மட்டும் தொடங்கப்பட்டன. அவற்றுக்கும் தொகை வழங்காமல் பணிகள் பாதியிலேயே உள்ளன. மேலும் சில பணிகள் தொடங்க முடியாத அவல நிலையில் உள்ளது. எந்த நோக்கத்துக்காக இந்த திட்ட உதவி செய்யப்படுகிறதோ அது பயனில்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுநாள் வரை நிதிப்பற்றாக்குறையால் அனைத்து துறைகளின் நலத் திட்டப்பணிகளும் , வளர்ச்சித் திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது  பேரவைத் தொகுதி  மேம்பாட்டு நிதியிலும் பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இதனை புதுச்சேரி ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.  இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, நிலுவையில் உள்ள தொகையை அனுமதிப்பதோடு, அறிவிப்பு செய்த ரூ.2 கோடியையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com