ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிக விலைக்கு பருத்தி ஏலம்: அதிகாரி தகவல்
By DIN | Published On : 23rd June 2019 01:43 AM | Last Updated : 23rd June 2019 01:43 AM | அ+அ அ- |

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திப் பஞ்சு அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, காரைக்கால் விற்பனைக் குழு செயலர் ஆர். கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. அதன்படி, ஜூன் 21-ஆம் தேதி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டுவந்து ஏலத்தில் கலந்துகொண்டனர்.
சுமார் 20 குவிண்டால் எடை கொண்ட தரமான பருத்திப் பஞ்சு ஏலத்தில் விடப்பட்டது. இதில் சேலம், திருப்பூரைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர். கடந்த வார ஏலத்தைக் காட்டிலும் நிகழ்வாரம் பஞ்சு விலையானது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 5,219 (கிலோ ரூ.52.19), குறைந்தபட்ச விலையாக ரூ. 5,149 (கிலோ ரூ.51.49) பஞ்சு விற்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே பஞ்சு கொள்முதல் செய்யப்படுவதால், மேற்கண்ட அதிகபடியான விலையால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பருத்தி சாகுபடி விவசாயிகள் அனைவரும் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்குகொண்டு, தங்களது பருத்தியை தரத்துக்கு ஏற்ப, சரியான எடைக்கு, போட்டி விலைக்கு விற்று லாபம் பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர், விற்பனைக் குழுத் தலைவர் ஆகியோரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.