கர்நாடக பேரவை துணைத் தலைவர், காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கி கௌரவிப்பு
By DIN | Published On : 25th June 2019 10:02 AM | Last Updated : 25th June 2019 10:02 AM | அ+அ அ- |

கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர், காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு பூந்தோட்டம் கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்காலில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார் சேவா சங்க அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : பூந்தோட்டம் தர்மசம்வர்த்தனி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை விமரிசையாக நடத்தி முடித்த மற்றும் பல்வேறு ஆன்மிக சேவைகளுக்காக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு சிவ சேவா சதுரர் விருதை சங்கம் சார்பில் கர்நாடக சட்டப் பேரவை துணைத் தலைவர் கிருஷ்ணா ரெட்டி வழங்கினார். கர்நாடக பேரவை துணைத் தலைவர் கிருஷ்ணா ரெட்டிக்கு சனாதன தர்ம ரக்ஷ்கர் விருதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஆலய தரிசனம் மனதுக்கு நிம்மதியை தருகிறது, குறிப்பாக திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் தூய்மை முறையாக பராமரிக்கப்படுவதாக கர்நாடக பேரவை துணைத் தலைவர் பெருமிதத்துடன் கூறினார். நாடெங்கும் மழை பெய்யவேண்டும், அணைகள் நிரம்பி விவசாயம் வளம்பெறவும், மக்கள் தண்ணீர் பஞ்சமின்றி வாழ இறைவன் கருணை காட்டவேண்டும் என காரைக்கால் ஆட்சியர் பேசினார். இதில் சங்கத்தின் மாநில செயலர் சுவாமிநாத சிவாச்சாரியார், கஞ்சனூர் சுப்ரமண்ய சிவாச்சாரியார், காரைக்கால் மாவட்டத் தலைவர் வெங்கடேச சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.