சுடச்சுட

  

  நீர்வரத்துக்கு முன்பாக கடைமடை மதகுகளில் பராமரிப்புப் பணி: பொதுப்பணித் துறை கவனிக்குமா?

  By DIN  |   Published on : 26th June 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் பகுதி ஆறுகளின் கடைமடை மதகுகளில் நீர் வரத்துக்கு முன்பாக பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 
  காவிரி நீர் கடைமடைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை தெரியவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முந்தைய கூட்டத்தில் தமிழகம், புதுவைக்குரிய நீரை விடுவிக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டும், கர்நாடகம் இதனை அமல்படுத்தவில்லை. தற்போது 4-ஆவது கூட்டம் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வழக்கமாக ஜூன், ஜூலையில் திறக்கப்படும் அணை நிகழாண்டு திறப்பதற்கான வாய்ப்பு தெரியவில்லை.
  மழை வேண்டி ஆங்காங்கே வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் மக்கள் விவசாயப் பணிக்கும், குடிநீருக்கும் தவிக்கின்றனர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆறுகளில் தண்ணீர் வரும் காலத்துக்கு முன்பாக ஆறுகளைத் தூர்வாருவதும், கடைமடை அணைகளை பராமரிப்பு செய்வதும் உரிய தருணத்தில் செய்யக்கூடிய  செயல்களாகும்.
  காரைக்காலில் தேசிய ஊரக வேலைத் திட்டமாக வாய்க்கால், குளம் தூர்வாரும் பணிகள் நடக்கிறதே தவிர, ஆறுகள் பொதுப்பணித்துறையால் தூர்வாருவதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை.
  பொதுப்பணித்துறை நிர்வாகத்துக்கு, இந்த பணிகளுக்கென அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். உரிய திட்டமிடலுடன் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு பணிகளை மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தால், காவிரி நீர் அல்லது மழை நீர் உரிய முறையில் தேக்கி வைக்க முடியும். விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கு தண்ணீர் முறையாக விநியோகிக்கப்படும். கட்டுப்பாடில்லாமல் நீர் கசிவு போன்ற நிலை ஏற்படாது.
  காரைக்கால் மாவட்டம் கடைமடைப் பகுதியாக இருப்பதால், ஒவ்வோர் ஆற்றிலும்  ஒன்று அல்லது 2  நீர்த்தேக்க மதகுகள் குறிப்பிட்ட இடங்களில் கடலில் இருந்து 1  கி.மீட்டர் தூரத்திலும், சில இடங்களில் கூடுதல் தூரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மதகுகளை  பொதுப்பணித்துறை ஊழியர்கள் கண்காணிக்கிறார்கள். மதகுகள் இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. கடல் நீர், உள்புகுந்துவிடாமல் தடுக்கவும், பருவகாலத்தில் கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்கவுமே இந்த கடை மடை அணைகள் பயன்படுகின்றன.
  காரைக்காலில் உள்ள பல ஆறுகளின் கடைமடை மதகுகளின் துத்தநாகத் தகடுகள் அரிப்பு ஏற்பட்டு, தேங்கியிருக்கும் தண்ணீர் கசியும் விதத்திலும், கடல் நீர் ஆற்றில் மேற்கு நோக்கி வரும்போது, உவர் நீர் ஆற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கலக்கும் விதத்திலேயே இவை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
  பெரும்பாலான கடை மடை மதகுகள் இந்த நிலையிலேயே இருக்கின்றன. இது கடந்த ஆண்டு முதல் நீடிக்கும் பிரச்னை என்றும், நீர் வரத்து ஆற்றில் ஏற்படுவதற்கு முன்பாக, முன்னுரிமை அடிப்படையில் பெரும்  சேதமான மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
  புதுச்சேரி வேளாண் அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கடலோரப் பகுதியாக இருப்பதால் கடை மடை மதகுகளின் வழியே கடல் நீர் புகாத வகையிலும், நீரை சேமிக்கும் போது நீர் இருப்பு குறையாத வகையில் கடை மடை மதகுகளை முறையாக பராமரிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல்வர், வேளாண் அமைச்சர் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளதாக காரைக்கால் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
  விவசாயிகள் குறைதீர் கூட்டம் அவசியம் :  காரைக்காலில் நீர், விவசாயம், கால்நடை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பல்வேறு தொழிலில் ஆயிரக்கணக்கனோர் ஈடுபட்டுள்ளனர். எந்தவொரு பிரச்னையானாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்திக்க வேண்டியுள்ளது. புகார் சீரமைப்பில் பல துறை தொடர்பு  இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு துறைக்கும் தெரிவிக்க வேண்டியுள்ளது. காரைக்கால் மாவட்டமாக உள்ள நிலையில், மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேளாண் அமைச்சர், ஆட்சியர், வேளாண்மை, கால்நடை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்புடன் நடத்த வேண்டும். அப்போது புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என பெரும்பாலான விவசாயிகள்
  வலியுறுத்துகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai