குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

நடு ஓடுதுறை பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

நடு ஓடுதுறை பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
  தமிழகத்தை ஒப்பிடுகையில் புதுச்சேரி மாநிலத்தில் குறிப்பாக காரைக்காலில் குடிநீர் பிரச்னை இல்லை என்பது உண்மை. ஆனால் காரைக்கால் தெற்கு தொகுதிக்குள்பட்ட நடு ஓடுதுறை பகுதியில் குடிநீர் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. 
 நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது கீழமனை ஆற்றங்கரைப்பேட், மேல ஓடுதுறை பங்களாத் தோட்டம் ஆகிய இரு இடங்களில் ஆழ்குழாய் (போர்) போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போர் போடப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பம்ப்பிங் லைன் கொடுக்கப்படவில்லை.
பம்ப்பிங் லைன் அமைக்க சுமார் ரூ.80 லட்சம் செலவாகும். அது கொடுக்கப்பட்டால்தான் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இந்நிலையில், தற்போது நடு ஓடுதுறை பகுதியில் குடிநீர் பிரச்னை வெகுவாக ஏற்பட்டு, அரசின் கவனத்தை ஈர்க்க மக்கள்  சாலை மறியல் போராட்டம் செய்யும் முடிவை எடுக்க நேரிட்டது.
இதுசம்பந்தமாக அந்த மக்களை சந்தித்துப் பேசினேன். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினேன். நிதி இல்லை என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது. புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் அதிக அளவில் நிதி செலவு செய்யப்படுகிறது. ஆனால் காரைக்காலுக்கு உரிய நிதி கேட்டுப் பெறப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 
எனவே இனியாவது நடு ஓடுதுறை பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பம்ப்பிங் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நடு ஓடுதுறைக்கு மட்டுமல்லாமல் சுற்றியிருக்கக் கூடிய பல்வேறு பகுதி மக்களுக்கும் பயனளிக்கும். 
தெற்குத் தொகுதியில் நிலவக் கூடிய குடிநீர் பிரச்னைகள் அனைத்துக்கும் இது தீர்வாக அமையும். இது ஒரு தொலைநோக்குத் திட்டமாக இருந்தாலும், தற்போது நிலவக்கூடிய குடிநீர் பிரச்னைக்கு, தற்காலிகமாக அதிக செலவின்றி உடனடி தீர்வு காண்பதற்கும் உரிய வழிமுறைகள் உள்ளன. அது குறித்து பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது குறித்து தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் உரிய கவனம் செலுத்தி இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 காரைக்கால் நகரப் பகுதியில் பொது நூலகம் இயங்கி வரும் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நூலகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.  எதிர்புறத்தில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத் துறையில் இது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் நூலகம் முழுவீச்சில் செயல்படவில்லை. எனவே கட்டடம் சீரமைக்கும் வரை நூலகத்தை அனைத்து நாள்களிலும் தற்காலிக இடமான செய்தித்துறையில் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் உடனடியாக செய்ய வேண்டும் என்றார் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com