நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து  சம்மேளனத்தினர் முதல்வருடன் சந்திப்பு

உள்ளாட்சி ஊழியர்களுக்கான ஊதியத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர், உள்ளாட்சித் துறை

உள்ளாட்சி ஊழியர்களுக்கான ஊதியத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சரை சங்கப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன செயற்குழு முடிவின்படி சம்மேளனத் தலைவர்  ஐயப்பன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவர் உலகநாதன் ஆகியோர்  புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோரை புதுச்சேரியில் சந்தித்தனர். இதுதொடர்பாக சம்மேளனம்  சார்பில் புதன்கிழமை வெளியிட்ட  செய்திக் குறிப்பு: 
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளாட்சித்துறையின் ஊதிய கணக்கின்கீழ் நேரடியாக ஊதியம் வழங்க நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்க வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்பு முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் நடைபெற்றது.  
அரசின் மானியம் பல ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதுபோல பல வரிகளை அரசு உயர்த்திய நிலையில், 25 சதவீதத்தை அரசு குறைத்தும்விட்டது. மானியம் குறைப்பு, வரி வீதம் குறைப்பால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி வருவாய் குறைகிறது.
காரைக்காலில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் தரப்படுவதில்லை. சில மாதங்கள் கடந்து தரப்படுவதால் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரும் பாதிப்பை  சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, பட்ஜெட்டில் உள்ளாட்சி ஊழியர்களுக்கான ஊதிய நிதியை மொத்தமாக ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில், ஊழியர்கள் ஊதியம் தொடர்பாக பாதிப்பை சந்திக்க மாட்டார்கள் என முதல்வர், அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக அரசு செயலர் உள்ளிட்டோருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும், அமைச்சரிடம் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆனந்தகணபதி, அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், பொறுப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com