என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நிறைவு
By DIN | Published On : 04th March 2019 12:55 AM | Last Updated : 04th March 2019 12:55 AM | அ+அ அ- |

காரைக்கால் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஒரு வார கால என்.எஸ்.எஸ். விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
புதுச்சேரி அரசு நிறுவனமான சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் கிளை காரைக்காலில் இயங்கி வருகிறது. இம்மையம் மூலம் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது. கோயில்பத்து பகுதியில் வீட்டுக் கணக்கெடுப்பில் மாணவர்கள் ஈடுபட்டு, நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பது குறித்து விளக்கினர்.
தொடர்ந்து அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் சிவகுமார் கலந்துகொண்டு தலைமை பண்புகள் குறித்து மாணவர்களிடையே பேசினார். கோயில்பத்து பகுதியில் உள்ள மக்களுக்கு உடல் நலம் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாணவர்களிடையே காரைக்கால் மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜெயபாரதி, மன அழுத்தம் இல்லாத நிலை குறித்து விளக்கிப் பேசினார்.
மக்களுக்கு சிறுநீரில் சக்கரை அளவு பரிசோதனை செய்தல், ரத்தக் கொதிப்பு, ரத்த சோகை குறித்த பரிசோதனைகள், குழந்தை வளர்ப்பு முறை, தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், தடுப்பூசி அட்டவணை, சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாணவர்கள் நடத்தினர். ஹோமியோபதி போன்ற இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து மருத்துவர் சேவற்கொடியோன் பேசினார். மக்களிடையேயும், மாணவர்களிடையேயேயும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றபோது, சமூக ஆர்வலர் சிவகுமார் கலந்துகொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜெயபாரதி பரிசுகள் வழங்கினார். நிறைவாக மையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகமங்கலம் நன்றி கூறினார்.